மகள் என்று அழைத்தார் - நிர்வாண வீடியோவை காட்டினார்: சாமியார் குறித்து வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!

செப்டம்பர் 24, 2019 350

புதுடெல்லி (24 செப் 2019);  முன்னாள் மத்திய பாஜக அமைச்சரும், சாமியாருமான சின்மயானந்தா குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலியல் வன்புணர்வு செய்ததாக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் சாமியார் சின்மயாநந்த் கைது செய்யப்பட்டு தற்போது பாலியல் வழக்கில் சிக்கி தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஷாஜஹான்பூர் சட்டக் கல்லூரியில் சின்மயானந்தாவால் பாலியில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் "சின்மயானந்தா முதலில் மகள் என்றுதான் அழைத்தார். அவ்வப்போது படிப்பு குறித்துக் கேட்டு பாராட்டுவார். ஆனால் அவர் இப்படி செய்வார் என்று நினைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அதிர்ச்சிகரமான தகவல்களைத் தெரிவித்துள்ளார். “முதல் 5 வருட படிப்பை முடித்தபிறகு மேற்படிப்பை அங்கு தொடர அட்மிஷன் குறித்து கேட்டபோது சின்மயானந்தவை நேரில் பார்க்குமாறு கல்லூரி முதல்வர் சொல்லவே நேரடியாகச் சென்று சந்தித்தேன். அப்போது சின்மயானந்தா நன்றாகப் பேசினார். படிப்பிற்கு உதவித் தொகை தருவதாகவும் நம்பிக்கை அளித்தார். அதன்பின்னர் அங்கேயே வேலையும் தருவதாகச் சொன்னார்.

கடந்த அக்டோபர் மாதத்தில் சின்மயானந்தா என்னை மீண்டும் அழைத்தார். என் படிப்பு குறித்ததாக இருக்கும் என நினைத்துச் சென்றேன். சின்மயானந்தா அவரது செல்போனில் நான் நிர்வாணமாக குளிக்கும் வீடியோவை என்னிடம் காட்டினார். நான் அதிர்ச்சியடைந்து அழத் தொடங்கினேன். அவர் என்னைப் பார்த்து சிரித்தார்.

உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது கல்லூரி விடுதியில் தங்கும்படியும் தனக்கு வேண்டியதைச் செய்யவேண்டும் எனவும் இல்லையென்றால் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் எனவும் குடும்பத்தினரைக் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டினார்.

மகள் என்று சொன்னவர் நிர்வாண வீடியோ எடுத்து என்னை மிரட்டுவார் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. சின்மயானந்தா தனக்கு சேவைசெய்ய வேண்டும் என்றும் ஆயில் மசாஜ் செய்யும்படியும் சொன்னார். ஆனால் பலமுறை நான் மறுத்துவந்த நிலையில் கடுமையாக தாக்கி இருக்கிறார்.

சின்மயானந்தா ஆசிரமத்தில் இருக்கும்போது காலை 6 மணிக்கு மசாஜ் செய்ய அழைத்துச் செல்வார்கள். அதன் பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் அழைத்துச் சென்று பாலியல் கொடுமைக்கு உள்ளாக்குவார்கள். பிற்பகலில் செல்வதைத் தவிர்க்க பலமுறை முயற்சி செய்வேன். முதலில் ஆயில் மசாஜ் செய்யச் சொன்னார்; செய்தேன். அவரது ஆடைகளைக் களையச் சொன்னதும் அதிர்ச்சி அடைந்தேன்.

சின்மயானந்தா கொடூரமான முறையில் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்தார். அதன் பின்னர் தனியாக மருத்துவரை வைத்து சிகிச்சை அளித்தார்கள். மற்ற மருத்துவர்களிடம் சென்றால் விவகாரம் வெளியில் தெரிந்துவிடும் என்பதால் தனியாக மருத்துவரை வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

சின்மயானந்தவின் ஆட்கள் தொடர்ந்து என் செயல்பாடுகளை கவனித்து வந்தார்கள். மசாஜ் செய்வதைத் தாண்டி மற்ற விஷயங்களுக்கு வற்புறுத்தியபோது தான் இதை வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்று முடிவு செய்தேன்.

இப்படி எனக்கு நடந்ததை வெளியில் சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள் என்பதால் அதற்கான ஆதாரத்தைத் திரட்ட முடிவு செய்தேன். என்னை வீடியோ எடுத்து மிரட்டும் அவருக்கு எதிராக வீடியோ ஆதாரத்தைப் பயன்படுத்த திட்டமிட்டேன்.

கண் கண்ணாடியில் கேமரா வைத்து அவரது பாலியல் கொடுமைகளை வீடியோவாகப் பதிவு செய்தேன்.” எனக் கண்ணீரோடு தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் சமர்ப்பித்த வீடியோக்கள் விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வீடியோக்கள் உண்மையானது தான் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...