பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச அமைப்பை ஏற்படுத்த மோடி வலியுறுத்தல்!

செப்டம்பர் 25, 2019 177

நியூயார்க் (25 செப் 2019): உலகம் எங்கும் உள்ள பயங்கரவாதத்தை ஒடுக்க சர்வதேச அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் 74-ஆவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதச் செயல்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தான கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:

பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் நிதி கிடைப்பதையும், ஆயுதங்கள் கிடைப்பதையும் தடுக்க வேண்டும். இதற்காக, அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச அமைப்பை உருவாக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான மனநிலை கொண்ட அனைத்து நாடுகளையும் ஓரணியில் இணைக்கும் முயற்சியில் இந்தியா தொடர்ந்து செயல்படும்.

பயங்கரவாதிகள் மீது ஐ.நா. விதிக்கும் தடைகளிலும், பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்பு (எஃப்ஏடிஎஃப்) செயல்படுவதிலும் எந்தவித அரசியல் தலையீடும் இல்லாததை உறுதி செய்ய வேண்டும். உலகின் எந்த மூலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினாலும், அதை பயங்கரவாதமாகவே கருத வேண்டும்.

பயங்கரவாதத் தாக்குதல்களில் சிறியது, பெரியது என்ற வேறுபாடோ, நல்லது, கெட்டது என்ற வேறுபாடோ கிடையாது.

பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்குவதில் பல்வேறு நாடுகளுக்கிடையே தற்போது காணப்படும் ஒத்துழைப்பு அதிகரிக்கப்பட வேண்டும். நாடுகளுக்கிடையேயான இருதரப்பு நல்லுறவு மூலமோ, பிராந்திய நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்கள் மூலமோ பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான எச்சரிக்கைகள் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும்.

உலகநாடுகளின் தலைவர்களுடன் சந்திப்பு: ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, உலகநாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல், இத்தாலி பிரதமர் ஜிசெப் கோன்டே, கத்தார் அரசர் ஷேக் தமீம் பின் ஹமாத், கொலம்பியா அதிபர் இவான் மார்க்கெஸ், நைஜர் அதிபர் இசோஃபு மகமது, நமீபியா அதிபர் ஹகே கெய்கோப், மாலத்தீவுகள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலி, பூடான் பிரதமர் லோதே ஷேரிங், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே உள்ளிட்டோரை பிரதமர் மோடி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...