உலக முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

செப்டம்பர் 26, 2019 148

நியூயார்க் (26 செப் 2019): "இந்தியாவில் எந்தவொரு துறையிலும் முதலீடு செய்ய இயலும். முதலீடு செய்வதற்கு இந்தியா பாதுகாப்பான நாடு' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற "புளூம்பெர்க்' உலக தொழில் மன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அங்கு அவர் பேசியதாவது:

இந்தியாவில் எந்தவொரு துறையிலும் முதலீடு செய்யலாம். வளரும் சந்தையில் முதலீடு செய்ய விரும்பினால், தற்கால நவீனங்கள் ஏற்கப்படும் சந்தையில் முதலீடு செய்ய விரும்பினால் நீங்கள் (முதலீட்டாளர்கள்) இந்தியாவுக்கு வர வேண்டும். இந்தியாவில் புத்தாக்க நிறுவனங்கள் நிறைந்த சந்தை உள்ளது. இதுவும் முதலீட்டாளர்களுக்கு சாதகமானதாகும்.

உள்கட்டமைப்பு மற்றும் மனை வணிகத் துறையில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் "பொலிவுறு நகரங்களை' (ஸ்மார்ட் சிட்டி) இந்தியா உருவாக்கி வருகிறது. அதன்மூலம் எங்களது நகரங்களை மிக வேகமாக நவீனப்படுத்தி வருகிறோம். நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் குடிமக்களுக்கு எளிதில் பயன்படக் கூடிய வகையிலான உள்கட்டமைப்புகளுடன் அந்த நகரங்கள் கட்டமைக்கப்படுகின்றன.

எனவே நகரமயமாதல் நடவடிக்கைகளில் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கு ஏற்ற நாடாகவும் இந்தியா இருக்கும். இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் மூலம் முதலீடு செய்ய முடியும். முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை முதலீடுகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்காகவும், உலகத்துக்காகவும் "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் தயாரிக்க முதலீட்டாளர்கள் இந்தியாவுக்கு வர வேண்டும்.

தொழில் செய்ய உகந்த நாடுகளின் தரவரிசையில் கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து இந்தியா 65 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளது. அரசியல் மற்றும் பண மதிப்பின் ஸ்திரத்தன்மை காரணமாகவே இது சாத்தியமானது.

அரசியல் ஸ்திரத்தன்மை, பண மதிப்பில் ஸ்திரத்தன்மை, உயர்தர பொருள்கள், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள், குறைந்த உற்பத்தி செலவு, அறிவுசார் சொத்துரிமையை மதித்தல் உள்ளிட்ட 10 காரணிகளைக் கொண்டு ஆசிய அளவில் நாடுகள் மதிப்பிடப்படுகின்றன. இந்த மதிப்பீட்டில் இந்தியா 7 காரணிகளில் சிறப்பாக விளங்குவதால் ஆசிய அளவில் முதலிடத்தில் உள்ளது. உங்களின் தொழில்நுட்பம், எங்களின் திறமை இணைந்தால் இந்த உலகத்தை மாற்ற இயலும். நமது ஒத்துழைப்பின் மூலம் உலக பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய இயலும் என்று பிரதமர் மோடி பேசினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...