சந்திரயான் 2 - விக்ரம் லேண்டர் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டது நாசா!

செப்டம்பர் 27, 2019 236

வாஷிங்டன் (27 செப் 2019): விக்ரம் லேண்டர் குறித்த முக்கிய அறிவிப்பை நாசா வெளியிட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பியது.

புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து விலகி, நிலவைச் சென்றடைந்த விண்கலத்திலிருந்து, விக்ரம் லேண்டர் பகுதி செப்டம்பர் 2-ஆம் தேதி வெற்றிகரமாகப் பிரித்து விடப்பட்டது. இதிலிருந்து பிரிந்த ஆர்பிட்டர், நிலவின் பரப்பிலிருந்து 100 கி.மீ. தொலைவில் தொடர்ந்து நிலவை நீள்வட்டப் பாதையில் சுற்றி வந்து ஆய்வு செய்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், பிரிந்த லேண்டர் பகுதியை 100 கி.மீ. தொலைவிலிருந்து படிப்படியாக குறைத்து நிலவின் பரப்பிலிருந்து 35 கி.மீ. தொலைவுக்கு விஞ்ஞானிகள் கொண்டு வந்தனர்.

லேண்டர் நிலவுக்கு மிக அருகே வந்ததைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் அதை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்குவதற்கான முயற்சியை விஞ்ஞானிகள் தொடங்கினர்.

இந்த சரித்திர நிகழ்வை நேரலையில் காண்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி, பள்ளி மாணவர்கள் மற்றும் பலர் பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் விடிய விடிய ஆவலுடன் காத்திருந்தனர். இந்திய மக்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலக நாடுகளும் இந்தியாவின் இந்தச் சாதனை நிகழ்வுக்காகக் காத்திருந்தனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே, சனிக்கிழமை அதிகாலை சரியாக 1.40 மணியளவில் லேண்டரை தரையிறக்குவதற்கான கட்டளையை விஞ்ஞானிகள் தரைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி பிறப்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து, லேண்டர் நிலவில் தரையிறங்க ஆரம்பித்தது. ஒவ்வொரு நிலையாகத் தாண்டி, நிலவின் பரப்பிலிருந்து 10 கி.மீ. தொலைவுக்கு வந்தபோது, கட்டுப்பாட்டு அறையிலிருந்த விஞ்ஞானிகள் அனைவரும் கைகளைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து லேண்டர் தரையிறங்கிக் கொண்டிருந்தது. ஆனால், நிலவின் பரப்பிலிருந்து 2.1 கி.மீ. தொலைவு வரை லேண்டர் வந்தபோது, அதற்கும் கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்புத் துண்டிக்கப்பட்டது. இதனால் லேண்டர் எங்கிருக்கிறது என்பதே தெரியாமல் போனது.

இதையறிந்த விஞ்ஞானிகள் பெரும் சோகத்துக்கு ஆளாகினர். இஸ்ரோ தலைவர் சிவன் உள்பட பல விஞ்ஞானிகள் கண்ணீர் விட்டு அழுதனர்.

நிலவில் காணாமல் போன லேண்டரை கண்டறிய முடியுமா, அதனுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த முடியுமா என்ற எதிர்பார்ப்புடன், விக்ரம் லேண்டரின் தொடர்பு எதனால் துண்டிக்கப்பட்டது என்பது குறித்து தேசிய அளவிலான ஒரு குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வந்தாலும், முன்னணி விஞ்ஞானி ஆய்வு மையமான நாசா உதவியை இஸ்ரோ நாடி இருந்தது.

இந்நிலையில், நாசா இன்று வெள்ளிக்கிழமை (செப்.27) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில். சந்திரயான் -2 விக்ரம் லேண்டர், செப்டம்பர் 7 (அமெரிக்காவில் செப்டம்பர் 6), சிம்பிலியஸ் என் மற்றும் மான்சினஸ் சி பள்ளங்களுக்கு இடையில் ஒரு சிறிய உயரமான மென்மையான சமவெளிகளில் தரையிறங்க முயன்றது. விக்ரமுக்கு இது ஹார்ட் லேண்டிங்காக மாறிவிட்டது. லேண்டர் எங்கே உள்ளது என்பது கண்டறியப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒரு படத்தையும் நாசா வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 17 ஆம் தேதி தரையிறங்கும் இடத்தைக் கடந்து, அந்தப் பகுதியின் உயர் தெளிவான படங்களை நாசாவின் எல்.ஆர்.ஓ (Lunar Reconnaissance Orbiter) மூலம் எடுக்கப்பட்டன. "தரையிறங்கும் பகுதி படமாக்கப்பட்டபோது இருட்டான நேரமாக இருந்தது. இதனால் படங்கள் இருட்டான நேரத்திலேயே எடுக்கப்பட்டதால் லேண்டர் இருக்கும் இடத்தை துல்லியமாக படமாக்க முடியவில்லை. இதுவரை விக்ரம் லேண்டர் எங்கே உள்ளது என்பதை, எல்.ஆர்.ஓ.சி குழுவால் கண்டுபிடிக்கவோ அல்லது படம்பிடிக்கவோ முடியவில்லை என்று நாசா ஒரு டிவிட்டில் தெரிவித்துள்ளது.

லேண்டர் இருக்கும் இடம் பெரிய நிழல்கள் நிறைந்த நிலப்பரப்பின் பெரும்பகுதியை உள்ளடக்கியதாகவும், அந்த நிழலில் லேண்டர் மறைந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த இடம் தென் துருவத்திலிருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழங்கால நிலப்பரப்பில் அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், அக்டோபரில் சந்திரனின் சுற்றுப்பாதையிலிருந்து மீண்டும் லேண்டரைக் கண்டுபிடித்து படமாக்க எங்கள் விண்கலம் முயற்சிக்கும், அப்போது வெளிச்சம் சாதகமாக இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.

லேண்டர் தரையிறங்கும் தளத்தின் மையப்பகுதி முழுவதும் சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆர்பிட்டர் கேமரா குயிக்மேப்பில் இருந்து படம் பிடிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்ஞான் லேண்டர் ஆயுட்காலம் 14 நாட்கள். அந்த கெடு ஏற்கெனவே கடந்து விட்டது. எனவே இனிமேல் அதனால் நமக்கு எந்த சிக்னலையும், தரமுடியாது என்று இஸ்ரோ தலைவர் சிவன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...