கோராக்பூர் ஹீரோ டாக்டர் கஃபீல் கான் குற்றமற்றவர் என தீர்ப்பு!

செப்டம்பர் 28, 2019 395

கோராக்பூர் (28 செப் 2019): உத்திர பிரதேசம் கோராக்பூர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் பலியான சம்பவத்தில் மருத்துவர் கஃபீல் கான் குற்றமற்றவர் என துறை ரீதியாக விசாரணை நடத்திய குழு அறிக்கை அளித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசுக்கு சொந்தமான பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை வீக்கம் காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு சுமார் 70-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகித்து வந்த தனியார் நிறுவனம் தனது நிலுவைத் தொகைக்காக ஆக்ஸிஜன் விநியோகத்தை நிறுத்தியதே குழந்தைகள் பலியானதற்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்ட இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் குழந்தைகளக் காப்பாற்ற தனது சொந்த பணத்தில் வெளியிலிருந்து ஆக்சிஜன் கொண்டு வந்து பல குழந்தைகளைக் காப்பாற்றி நற்பெயர் எடுத்த குழந்தைகள் மருத்துவர் கஃபீல்கான் ஆளும் பாஜக அரசால் கைது செய்யப்பட்டார். பணியில் இருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால், தனது சொந்த பணத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கி சில குழந்தைகளின் உயிரை அவர் காப்பாற்றியதாக தகவல்கள் வெளியாகின. அதேசமயம், தான் பலிகடா ஆக்கப்பட்டதாகவும், தான் குற்றமற்றவர் எனவும் கான் தொடர்ந்து கூறி வந்தார். சுமார் 9 மாதங்கள் சிறைத் தண்டனைக்கு பின்னர், ஜாமினில் வெளிவந்த கான், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி வந்தார்.

இந்த நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்திய குழு தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையை முன்கூட்டியே தனது மூத்த அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். அவர் அலட்சியமாக செயல்படவில்லை. சம்பவம் நடைபெற்ற அன்றைய இரவு தன்னால் இயன்றவரை தனது சொந்த பணத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கி குழந்தைகளின் உயிரை காப்பாற்ற போராடினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து தெரிவித்துள்ள டாக்டர் கஃபீல்கான் தனது ட்விட்டர் பக்கத்தில், “உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். குழந்தைகளை பலி கொடுத்த பெற்றோர்கள் நீதிக்காக இன்னும் காத்துக் கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களிடம் அரசு மன்னிப்பு கோருவதுடன், அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...