கடிதத்திற்கு தேச துரோக வழக்கா? - அடூர் கோபால கிருஷ்ணன் கொதிப்பு!

அக்டோபர் 04, 2019 383

திருவனந்தபுரம் (04 அக் 2019): பிரமருக்கு கடிதம் எழுதினால் தேச துரோக வழக்கு பதிவதா? என்று கேரள இயக்குநர் அடூர் கோபால கிருஷ்ணன் கடுமையாக சாடியுள்ளார்.

இயக்குநர் மணிரத்னம், ராமச்சந்திரா குஹா, அபர்னா சென், உள்பட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு எழுதியிருந்த கடிதத்தில் “ மேற்குவங்கம், பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து சிறுபான்மை இன இளைஞர்களை 'ஜெய்ஸ்ரீராம்' என கோஷமிடச் சொல்லித் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற செயல்களில் இந்துமத அடிப்படைவாத அமைப்புகளே ஈடுபடுகின்றன என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பிரதமராகிய நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த கடிதம் குறித்துக் கடந்த 2 மாதங்களுக்கு முன் மிஜாப்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர்புகார் மனுவைக் கொண்டு சேர்க்கிறார். இந்த புகார் மனுவை விசாரித்த மிஜாப்பூர் தலைமை நீதிபதி சூர்யா காந்த் திவாரி மனுவை ஏற்று மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது வழக்குப் பதிவு செய்திட நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, பீகாரில் உள்ள சர்தார் காவல் நிலையத்தில் 49 பேர் மீதும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடெங்கும் இந்த வழக்கிற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த கடிதம் எழுதியவர்களில் ஒருவரான பிரபல மலையாள இயக்குநர் அடூர் கோபால கிருஷணன், " கடிதம் எழுதினால் தேச துரோக வழக்கு பதிவதா?. நாட்டின் நடக்கும் அக்கிரமங்களை தட்டிக் கேட்கக் கூடாதா? இது எங்கோ நடந்த தாக்குதல்கள் அல்ல. நம் கண் முன்னே நடந்த அக்கிரமங்களை அடக்க பிரதமர் என்கிற முறையில் அவருக்கு கடிதம் எழுதினோம். நாட்டின் பன்முகத் தன்மையை நம் ஜனநாயக நாட்டில் நிலை நிறுத்த வேண்டும் என்றே அந்த கடிதம் எழுதப் பட்டது. அப்படி இருக்கையில், இது எப்படி தேச துரோகம் ஆகும்." என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...