வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் கூண்டோடு டிஸ்மிஸ்!

அக்டோபர் 07, 2019 249

ஐதராபாத் (07 அக் 2019): தெலங்கானா மாநிலத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களை கூண்டோடு டிஸ்மிஸ் செய்து அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தெலங்கானா சாலை போக்குவரத்துக் கழகத்தை (TSRTC) முழுமையாக அரசுடன் இணைப்பது, பல்வேறு காலி பணியிடங்களுக்கு போதுமாக ஆட்களை நியமிப்பது, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்குவது, 2017 ஊதிய சீரமைப்பு பரிந்துரைகளை அமல் படுத்துவது மற்றும் டீசல் மீதான வரியை அகற்றுவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் கடந்த வெள்ளிக் கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மூன்றாவது நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து வருகிறது. ஆயுதபூஜை, விஜயதசமி போன்ற தொடர் விடுமுறை நாள்களில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுவதால் பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். தனியார் ஓட்டுநர்கள் மற்றும் தனியார் பேருந்துகளின் உதவியுடன் 50% போக்குவரத்தைச் சரி செய்துள்ளது அம்மாநில அரசு. இதற்கிடையே நேற்று, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்பவில்லை எனில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிகை விடுத்தது.

ஆனால், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த 50,000 ஊழியர்களில் வெறும் 200 பேர் மட்டுமே பணிக்குத் திரும்பினர். இதையடுத்து அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் புவ்வாட அஜய்குமார் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதில் எந்தத் தீர்வும் எட்டப்படாத நிலையில், ஊழியர்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப்பெற மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் தெலங்கானாவின் முதன்மையான பிரச்னையாக மாறியுள்ள வேலைநிறுத்தப் போராட்டம் பற்றி போக்குவரத்து உயர் அதிகாரிகளுடன் நேற்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் பேசிய அவர்,``தொடர் விடுமுறை நாள்களில் இதுபோன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பெரிய குற்றம். போக்குவரத்துத் துறை கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும்போது இந்த வேலை நிறுத்தத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனக் கூறி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், போக்குவரத்துத் துறையை முழுமையான அரசுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் 3,000 முதல் 4,000 தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது, இளைஞர்களிடம் விண்ணப்பம் பெறப்பட்டு அவர்களுக்கு உரியப் பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...