மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேச துரோக வழக்கில் அதிரடி திருப்பம்!

அக்டோபர் 09, 2019 510

புதுடெல்லி (09 அக் 2019): மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேச துரோக வழக்கில் திடீர் திருப்பமாக இவர்கள் மீது மனு அளித்தவர் மீதே வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 திரையுலக பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இந்தியாவில், குறிப்பாக வட இந்தியாவில் நடக்கும் குழு வன்முறைகள் குறித்து புகார் தெரிவித்து உடனடியாக பிரதமர் தலையிட்டு வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

ஆனால் இந்த கடிதம் பிரதமரை அவமதிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி 49 பேர்களுக்கு எதிராக பீகாரின் முசாபர்நகர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதிர் ஓஜா என்பவர் வழக்கு தொடுத்தார். இதையடுத்து 49 பேருக்கும் எதிராக தேச துரோக வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து பீகாரில் இந்த 49 பேருக்கும் எதிராக தேச துரோக வழக்கு பதியப்பட்டு எப்ஐஆர் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் இவ்வழக்கின் திடீர் திருப்பமாக 49 பிரபலங்கள் மீது புகார் அளித்த நபருக்கு எதிராக 182வது சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 49 பேர் மீது புகார் அளித்த நபர் தவறான தகவல்கள் அளித்ததை பீகார் காவல்துறை கண்டுபிடித்ததை அடுத்தே இந்த நடவடிக்கை என தெரிகிறது.

மேலும் 49 பேர் மீதான வழக்கு திரும்பப் பெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...