ஏடாகூடமாக பேசி சிக்கலில் சிக்கிய மத்திய அமைச்சர்!

அக்டோபர் 13, 2019 333

புதுடெல்லி (13 அக் 2019): இந்திய பொருளாதாரம் குறித்து ஏடாகூடமாக பேசி தனது கருத்தை திரும்பப் பெற்றுள்ளார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மஹாராஸ்டிர தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பொருளாதார சரிவு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தேசிய விடுமுறைதினமான அக்டோபர் 2ம் தேதி, வார், சைரா, ஜோக்கர் ஆகிய 3 திரைப்படங்கள் இந்தியில் வெளியாகின. இந்த 3 திரைப்படங்களும் ஒரே நாளில் 120 கோடிரூபாய் வசூல் செய்துள்ளது என்று திரைவிமர்சகர் கோமல் மேத்தா கூறியிருந்தார். 3 திரைப்படங்கள் ஒரே நாளில் 120 கோடி ரூபாய் வசூல் செய்கிறதென்றால், இந்தியாவில் பொருளாதார சரிவு எங்கிருக்கிறது” என்று ரவிசங்கர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இவரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் அந்த கருத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், . நேற்று மும்பையில் பேசிய 3 திரைப்படங்கள் ஒரே நாளில் 120 கோடி ரூபாய் வசூல் செய்த செய்தி தரவுகளின் அடிப்படையில் உண்மையானவை. இதை நான் பேசியது, திரைப்படங்களின் தலைநகரமான மும்பையில். லட்சகணக்கானோருக்கு வேலைவாய்ப்பை அளித்துவரும், வரிகளின் மூலம் நாட்டிற்கு பங்களிப்புகளை அளித்து வரும், நமது திரைத்துறை மீது மிகவும் பெருமிதம் கொள்கிறோம். அதே நேரத்தில், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருவதையும் சுட்டிக்காட்டியிருந்தேன். பிரதமர் மோடி அரசு, சாதாரண மக்களின் உணர்வுகளின் மீது எப்போதும் அக்கறை கொண்டுள்ளது. நான் செய்தியாளர்களிடம் பேசிய முழு காணொளியும் சமூக வலைதளங்களில் இருக்கிறது. இருப்பினும், எனது அறிக்கை முற்றிலும் திரித்து கூறப்பட்டிருக்கிறது அதற்காக வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு, அமைச்சர் என்னும் முக்கியமான பொறுப்பில் இருப்பதால் எனது கருத்தை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...