அடிமேல் அடி வாங்கும் ஆட்டோ மொபைல் - மீண்டும் உற்பத்தி குறைவு!

அக்டோபர் 13, 2019 261

புதுடெல்லி (13 அக் 2019): ஆட்டோ மொபைல் உற்பத்தி வீழ்ச்சியை தொடர்ந்து மாருதி சுஸுகி நிறுவனம் தொடர்ந்து 8வது மாதமாக வாகன உற்பத்தியை குறைத்துள்ளது.

விற்பனை சரிவு காரணமாக மாருதி சுஸுகி நிறுவனம் தொடர்ச்சியாக உற்பத்தியை குறைத்து கொண்டே வருகிறது. இந்த வரிசையில் மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் தனது உற்பத்தியை 17.48 சதவீதம் குறைத்து கொண்டுள்ளது. தொடர்ந்து 8வது மாதமாக மாருதி சுஸுகி நிறுவனம் உற்பத்தியை குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் 1,32,199 வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 1,60,219 வாகனங்களாக இருந்தது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 1,30,264 பாசஞ்சர் வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது.

ஆனால் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1,57,659 பாசஞ்சர் வாகனங்களை உற்பத்தி செய்திருந்தது. இது 17.37 சதவீத வீழ்ச்சியாகும். அதே சமயம் ஆல்டோ, புதிய வேகன்ஆர், செலிரியோ, இக்னிஸ், ஸ்விப்ட், பலேனோ மற்றும் டிசையர் உள்ளிட்ட கார்களை உள்ளடக்கிய மினி மற்றும் காம்பேக்ட் செக்மெண்ட் கார்களின் உற்பத்தி 14.91 சதவீதம் குறைந்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் மினி மற்றும் காம்பேக்ட் செக்மெண்ட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 98,337 கார்களை மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 1,15,576 ஆக இருந்தது. அதேபோல் மாருதி சுஸுகி நிறுவனத்தின் யுடிலிட்டி வாகனங்களினுடைய உற்பத்தியும் 17.05 சதவீதம் குறைந்துள்ளது.

விட்டாரா பிரெஸ்ஸா, எர்டிகா மற்றும் எஸ்-க்ராஸ் உள்ளிட்ட கார்கள் யுடிலிட்டி செக்மெண்ட்டில் வருகின்றன. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் யுடிலிட்டி செக்மெண்ட்டில் 22,226 கார்களை உற்பத்தி செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 18,435 ஆக குறைந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...