தவறு செய்துவிட்டேன் - கெஜ்ரிவால் மீது அல்கா லம்பா அடுக்கடுக்கு குற்றச்சாட்டு!

அக்டோபர் 18, 2019 440

புதுடெல்லி (18 அக் 2019): ஆம் ஆத்மியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ள அல்கா லம்பா டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது அடுக்கடுகான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில், " காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நான் அந்தக் கட்சியில் இருபது ஆண்டுகாலம் இருந்திருக்கிறேன். ஷீலா தீட்சித்தை பற்றி கெஜ்ரிவால் சொன்ன கட்டுக்கதைகளையும், பொய்யையும் நம்பி தவறு செய்துவிட்டேன். ராம்லீலா மைதானத்தில் ஊழல் எதிர்ப்பு நாடகம் நடத்திய கெஜ்ரிவால், காங்கிரஸ் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை அப்போது தெரியாமல் நம்பிவிட்டேன். ஆனால், இப்போது தான் தெரிகிறது காங்கிரஸை பற்றி கெஜ்ரிவால் கூறியதெல்லாம் நூறு சதவீதம் பொய் என்று, உறுதியாக சொல்கிறேன் கெஜ்ரிவால் ஒரு உலக மகா நடிகர், ஏமாற்றுக்காரர். தன்னை அரசியலில் முன்னிறுத்திக்கொள்ள அபாண்ட குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் மீது சுமத்தியுள்ளார்." என்றார்.

மேலும் "ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பதற்காக ஊழல் எதிர்ப்பு நாடகம் நடத்தியவர் கெஜ்ரிவால். அவர் நினைத்தது மாதிரியே டெல்லி முதலமைச்சராகிவிட்டார், இப்போது கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டார். கெஜ்ரிவால் ஒரு விளம்பர பிரியர், மெட்ரோவில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிடுவார். ஆனால் எதையும் செயல்படுத்தமாட்டார். அவரை பொருத்தவரை விளம்பரம் தேடிக்கொள்வது மட்டுமே குறிக்கோள். பாஜகவுடன் ரகசிய உடன்படிக்கை செய்துகொண்டு, பாவம் கட்சியில் இருப்பவர்களை முட்டாள்கள் ஆக்குகிறார்." என்று அவர் தெரிவித்தார்.

அல்கா லம்பா ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி சாந்தினி சவுக் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...