ப. சிதம்பரத்திற்கு மிக முக்கிய நோய் தாக்குதல் என்பதால் மருத்துவ கண்காணிப்பு அவசியம்!

அக்டோபர் 31, 2019 333

புதுடெல்லி (31 அக் 2019): திகார் சிறையில் உள்ள ப. சிதம்பரம் கார்ன் (Crohn's Disease) நோயால் பாதிக்கப் பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேட்டை சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் சி.பி.ஐ. வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் பெற்றுள்ளார்.

அமலாக்கத்துறை வழக்கில் அவர் நீதிமன்ற காவலில் இருப்பதால் வெளியே வர முடியாத நிலையில் உள்ளார். அமலாக்கத்துறை வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு 4-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

ப.சிதம்பரத்துக்கு ஒருவேளை மட்டுமே வீட்டு உணவு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறை உணவு ஒத்துக்கொள்ளாததால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் 4 முறை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ப.சிதம்பரம் வயிற்று வலி காரணமாக ஆர்.எம்.எஸ். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டு அன்று இரவே ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு கார்ன் (Crohn's Disease) என்ற வயிற்று நோய் பாதிப்பு உள்ளதாகவும் அவருக்கு மிக முக்கிய மருத்துவ கவனிப்பு அவசியம் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதற்கிடையே காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கபில் சிபல், ப. சிதம்பரம் தொடர்ந்து எடை குறைந்து வருவதால் அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ப. சிதம்பரத்திற்கு சிறை விதிகளின்படி வீட்டு உணவு வழங்கவும் சிறப்பு கவனம் மேற்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...