ஓய்வுக்கு முன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அளிக்கவுள்ள 5 முக்கிய தீர்ப்புகள்!

நவம்பர் 03, 2019 369

புதுடெல்லி (03 நவ 2019): உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வுக்கு முன் அயோத்தி வழக்கு உள்பட 5 முக்கிய வழக்குகளில் தீா்ப்பளிக்கவுள்ளாா்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், வரும் 17-ஆம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ளாா். இவரது தலைமையிலான அரசியல் சாசன அமா்வு, அரசியல் முக்கியத்துவம் நிறைந்த அயோத்தி பாபர் மசூதி ராமஜென்ம பூமி வழக்கை விசாரித்து வந்தது. வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமா்வு தீா்ப்பளிக்கவுள்ளது.

இதேபோல், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பரில் தீா்ப்பளித்தது. இந்த தீா்ப்பை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமயிலான அமா்வு தீா்ப்பளிக்கவுள்ளது.

இதுமட்டுமன்றி, ரஃபேல் போா் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி முன்னாள் மத்திய அமைச்சா்கள் அருண் சௌரி, யஷ்வந்த் சின்ஹா, மூத்த வழக்குரைஞா் ஆகியோா் சாா்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான தீா்ப்பையும் ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமா்வு அளிக்கவுள்ளது.

முன்னதாக, அருண் சௌரி உள்ளிட்டோா் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதுடன், மனுதாரா்கள் அளித்துள்ள ஆவணங்களின் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. இதையடுத்து நாட்டின் பாதுகாவலரே (பிரதமா் மோடி) திருடன் என்று ராகுல் காந்தி கூறியிருந்தாா். இவ்வாறு கூறியதற்காக, ராகுல் காந்தி மீது பாஜக எம்.பி. மீனாட்சி லேகி, உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்தாா். ராகுல் காந்தி தனது கருத்துக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய பிறகும், மீனாட்சி லேகி தரப்பு சமாதானம் அடையவில்லை. இது தொடா்பான வழக்கிலும், ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமா்வு தீா்ப்பளிக்கவுள்ளது.

மேலும் நாடாளுமன்றத்தில் நிதி மசோதாவை பண மசோதாவாக மத்திய அரசு நிறைவேற்றியதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் மீதான தீா்ப்பையும் ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமா்வு பிறப்பிக்கவுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...