இந்தியாவில் முதலீடு செய்ய உகந்த தருணம்: பிரதமர் மோடி அழைப்பு!

நவம்பர் 04, 2019 223

புதுடெல்லி (04 நவ 2019): தாய்லாந்தில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் பாங்காக்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆதித்ய பிர்லா நிறுவனத்தின் பொன் விழா ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, தொழில்துறை தலைவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

இந்தியாவின் நிர்வாக செயல்பாட்டில், அதிகாரிகளின் ஆதிக்கம் நிறைந்த வழக்கமான நடைமுறைகள் நிறுத்தப்பட்டு, பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக வரி விதிப்பில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்களின் வரிப் பணத்துக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான வாய்ப்புகள், எளிதாக தொழில் தொடங்குதல், மக்களின் வாழ்க்கைத் தரம் ஆகியவை ஏற்றம் கண்டுள்ளன. அதேசமயம், ஊழல், வரி விகிதங்கள், சிக்கலான அலுவல் நடைமுறைகள், உயர் பதவிகளில் தகுதியற்றவர்கள் நியமிக்கப்படுவது ஆகியவை இறங்குமுகத்தில் உள்ளன. எனவே, இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இதுவே சிறப்பான தருணமாகும்.

கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 286 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.20 லட்சம் கோடி) அந்நிய நேரடி முதலீட்டை இந்தியா பெற்றிருக்கிறது.

இந்தியாவின் பொருளாதார மதிப்பை 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ.352 லட்சம் கோடி) அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-இல் எனது தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தபோது, நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ.141 லட்சம் கோடி) இருந்தது. ஆனால், 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ.211 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் வெற்றிகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேரடி மானியத் திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கான நிதி அவர்களைச் சென்றடைவதை உறுதி செய்துள்ளோம். இதன் மூலம் இடைத்தரகர் கலாசாரத்துக்கும், திறனற்ற செயல்பாட்டுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் முதலீட்டுக்கு உகந்த வெகுசில நாடுகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றியிருக்கிறோம்.

உலக வங்கியின் "தொழில் புரிய உகந்த நாடுகள்' நாடுகள் பட்டியலில் கடந்த 2014-இல் 142-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2019-இல் 79-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தியாவில் திறன்வாய்ந்த மனிதவளம் கொட்டிக் கிடக்கிறது. சாலை, விமானப் போக்குவரத்து, தூய்மை, சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றை மேம்படுத்தியுள்ளோம். எனவே, தாய்லாந்தைச் சேர்ந்த முதலீட்டாளர்கள், இந்தியாவில் முதலீடு செய்து, வளர்ச்சிப் பயணத்தில் பங்கெடுக்க வேண்டும். இந்தியா வளமடையும்போது, உலகமும் வளமடைகிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவு ஆழமானது. எனது அரசின் கிழக்கு நோக்கிய கொள்கையின் மூலம் அந்த நாடுகளுடனான உறவுகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றார் பிரதமர் மோடி.

தாய்லாந்தில் கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஆதித்ய பிர்லா நிறுவனம், அங்கு ஜவுளி, ரசாயனம் என பல்வேறு துறைகளில் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...