டிவி நிகழ்ச்சியில் கிடைத்த பரிசுத் தொகையை தான் பயிலும் பள்ளிக்கு கொடுக்க முன் வந்த ஏழை மாணவர்!

நவம்பர் 06, 2019 234

பெங்களூரு (06 நவ 2019): கர்நாடகாவில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கிடைத்த பரிசுத் தொகையை தான் பயிலும் பள்ளியில் சுவர் எழுப்புவதற்காக கொடுக்க முன்வந்த மாணவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

கர்நாடக மாநிலம் ஹாசன் தாலுகாவில் உள்ள கட்டாயா பகுதியைச் சேர்ந்தவர் கே.என்.தேஜஸ். இவர் அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலையில் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை நஞ்சப்பா ஒரு விவசாயத் தொழிலாளி. தாயார் கவுரமணி அரசு பள்ளியில் மதிய உணவு சமைக்கும் பணியாளராக உள்ளார்.

தேஜஸ் கட்டாயாவில் தனது அத்தை வீட்டில் தங்கி இருக்கிறார். உறவினர் ஒருவர்தான் அவரது கல்வி செலவுகளை கவனித்து வந்தார்.

சமீபத்தில் தேஜஸ் கன்னட டி.வி. நடத்திய வினாடி-வினா நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் வெற்றி பெற்ற தேஜசுக்கு மூலம் ரூ.6.4 லட்சத்தை பரிசாக கிடைத்தது. இந்த நிகழ்ச்சி கடந்த வாரம் இறுதியில் ஒளிபரப்பப்பட்டது.

அப்போது பரிசு பணத்தை எவ்வாறு செலவிடுவீர்கள்? என மாணவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு தேஜஸ் பரிசு தொகையில் ஒரு பகுதியை தான் படிக்கும் பள்ளியில் காம்பவுண்டு சுவர் கட்டுவதற்கு கொடுப்பேன். மேலும் எனது மூத்த சகோதரியின் திருமணத்துக்காகவும், எனது உயர் படிப்புகளுக்காகவும் பயன்படுத்துவேன் என்றார்.

பரிசு தொகையை பள்ளி கட்டிடத்திற்கு கொடுப்பேன் என கூறிய மாணவர் தேஜசுக்கு பாராட்டுகள் குவிந்தது. கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் பேஸ்புக்கில் மாணவரை பாராட்டி பதிவிட்டிருந்தார்.

அதோடு பள்ளியில் காம்பவுண்டு சுவர் கட்டுவதற்கு உதவ முன்வந்த மாணவருக்கு நன்றி. பரிசு பணத்தை உனது படிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் பள்ளிக்கு காம்பவுண்டு சுவர் கட்டுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

கல்வி மந்திரியின் பாராட்டுக்கும், அரசு நிதியில் பள்ளிக்கு காம்பவுண்டு சுவர் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டதற்கும் மாணவர் தேஜஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவரின் இந்த நல்ல மனதுக்கு பல தரப்பிலும் பாராட்டுக்கள் குவிகின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...