நவஜோத் சிங் சித்து பாகிஸ்தான் பயணிக்க அனுமதி!

நவம்பர் 07, 2019 236

புதுடெல்லி (07 நவ 2019): பாகிஸ்தானில் கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவிற்கு செல்ல காங்கிரஸ் எம்.எல்.ஏ நவ்ஜோத் சிங் சித்துவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

சீக்கியர்கள் விசா இன்றி பாகிஸ்தானில் உள்ள தர்பார் சாகிப் குருத்வாரா சென்று வழிபட்டு வருவதற்கான கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தம் இந்தியா -பாகிஸ்தான் இடையே கையெழுத்தாகின.

அதன்படி பஞ்சாப்பில் தேராபாபா நானக் குருத்வாராவில் இருந்து கர்தார்பூர் தர்பார் சாகிப் குருத்வாராவுக்கு இடையே (சர்வதேச எல்லையில் இருந்து) 4 கி.மீ. தொலைவுக்கு வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தை குருநானக்கின் 550-வது பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 9-ம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் திறந்து வைக்கிறார். இவ்விழாவிற்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும் ஆன நவ்ஜோத் சிங் சித்துவிற்கு பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தின் சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்விழாவில் பங்கேற்க அனுமதி கேட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு சித்து கடிதம் எழுதியிருந்தார். ஏற்கனவே இரு முறை கடிதம் எழுதியும் பதில் இல்லாததால் மூன்றாவது முறை கடிதம் எழுதியிருந்தார்.

இதனை அடுத்து சித்து பாகிஸ்தான் கர்தார்பூர் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...