பாஜக கண்ணில் விரலை விட்டு ஆட்டும் சிவசேனா - மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பம்!

நவம்பர் 11, 2019 433

மும்பை (11 நவ 2019): மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

மகாராஷ்டிராவில் அதிக இடங்களை வென்ற கட்சி என்ற அடிப்படையில், ஆட்சியமைக்க வருமாறு பாஜகவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அழைப்பு விடுத்திருந்தார். ஆளுநரின் அழைப்பை அடுத்து, நேற்று மும்பையில் பா.ஜ.க-வின் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் மாலை டெல்லி தலைமை தகவல் கொடுத்ததை அடுத்து ஆளுநரை சந்தித்தனர் பாஜக நிர்வாகிகள்.

சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த், ``சிவசேனா முதல்வர் பதவி கேட்டுப் பிடிவாதம் செய்கிறது. சிவசேனா - பாஜக கூட்டணிக்கு மக்கள் வாக்கு அளித்தனர். மக்களின் முடிவை அவமதிக்கும் செயல் இது. சிவசேனா கட்சி மக்களின் தீர்ப்பை உதாசினப்படுத்திவிட்டது. எனவே, நாங்கள் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கப் போவதில்லை என்று முடிவு செய்துவிட்டோம். எங்கள் முடிவை ஆளுநரிடம் தெரிவித்துவிட்டோம். என்றார்.

பாஜக ஆட்சியமைக்க மறுப்பு தெரிவித்ததை அடுத்து தற்போது சிவசேனாவை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார் அம்மாநில ஆளுநர்.

சிவசேனா தேசியவாத காங்கிரஸ் உதவியுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முடிவு செய்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும்விதமாகவே அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் இன்றைய பேட்டியும், சாம்னா பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரையும் அமைந்திருந்தது. சாம்னாவில், ``அடுத்த மகாராஷ்டிரா முதல்வர் குறித்து கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முடிவு செய்வார் என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் இந்த செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பார்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...