பாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்த சிவசேனா!

நவம்பர் 11, 2019 383

புதுடெல்லி (11 நவ 2019): மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜிநாமா செய்வதாக சிவ சேனை எம்.பி. அரவிந்த் சாவந்த் அறிவித்துள்ளது பாஜகவுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் பெரும்பான்மை இல்லாததால் பாஜக ஆட்சி அமைக்க மறுத்துவிட்டது. இதையடுத்து ஆட்சி அமைக்குமாறு சிவசேனை கட்சிக்கு மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி அழைப்பு விடுத்தார். இதன் மூலம் மகாராஷ்டிர அரசியல் களத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆட்சியமைக்க 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவையென்ற நிலையில், 54 எம்எல்ஏக்களைக் கொண்ட தேசியவாத காங்கிரஸ், 44 எம்எல்ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் ஆகியவை ஆதரவளிக்கும் பட்சத்தில் சிவசேனை கட்சியால் ஆட்சி அமைக்க முடியும்.

சிவசேனைக்கு ஆதரவு அளிப்பது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) ஆலோசிக்க வேண்டுமென்றால், முதலில் அக்கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலக வேண்டுமென்று என்சிபி செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியுள்ளார்.

இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜிநாமா செய்வதாக மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்களின் அமைச்சரும், சிவசேனை எம்.பி.யுமான அரவிந்த் சாவந்த் திங்கள்கிழமை அதிகாலை அறிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...