மகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் - ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸுக்கு ஆளுநர் அழைப்பு!

நவம்பர் 12, 2019 265

மும்பை (12 நவ 2019): மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்குமாறு 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி அழைப்பு விடுத்துள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனை 56 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

பாஜக ஏற்கனவே ஆட்சி அமைக்கப் போவதில்லை என்று ஆளுநரிடன் அறிவித்து விட்டதால் சிவசேனாவுக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. ஆனால் திங்கள் கிழமை மாலை 07:30 மணியுடன் அவகாசம் கொடுக்கப் பட்டு கெடு முடிந்துவிட்டதால், மகாராஷ்டிர அரசியல் மீண்டும் ஒரு அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியை, ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

இதன்படி, அஜித் பவார், தனஞ்ஜெய முண்டே உள்ளிட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஆளுநர் பகத் சிங் கோஷியாரியைச் சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயந்த் பாட்டீல், "நாங்கள் 3-வது பெரிய கட்சி என்பதால், ஆளுநர் விதிப்படி எங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாங்கள் எங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, கூடிய விரைவில் வந்து உங்களைச் சந்திக்கிறோம் என ஆளுநரிடம் தெரிவித்தோம்.நாளை இரவு 08:30 க்குள் முடிவை அறிவிக்க ஆளுநர் அவகாசம் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் மகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...