17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்

நவம்பர் 13, 2019 259

புதுடெல்லி (13 நவ 2019): கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 13 பேர், மஜத எம்எல்ஏக்கள் 3 பேர், சுயேச்சை எம்எல்ஏக்கள் 2 பேர் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ், மஜத மற்றும் சுயேச்சை அதிருப்தி எம்எல்ஏக்கள் 17 பேரையும் பேரவைத் தலைவராக இருந்த ரமேஷ் குமார் தகுதிநீக்கம் செய்தார்.

இதை எதிர்த்து, அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் அவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இருப்பினும் அதற்கு உச்ச நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்தது.

இந்நிலையில், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கட்சிகளைச் சேர்ந்த மற்றும் சுயேச்சை என 17 அதிருப்தி எம்எல்ஏக்களின் தகுதி நீக்கமும் செல்லும் என உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

இருப்பினும், இவர்களின் தகுதி நீக்கம் கர்நாடகத்தின் 15-ஆவது சட்டப்பேரவை வரை மட்டுமே செல்லுபடியாகும். மேலும் டிச. 5-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்கள் மீண்டும் போட்டியிடலாம். அதில் வெற்றிபெற்று மீண்டும் பேரவை உறுப்பினர்களானால் அமைச்சர்களாகவும் நியமிக்கப்படலாம் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் முதலில் உயர் நீதிமன்றத்தை அணுகாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...