உலகப் பொருளாதார இழப்பிற்கு காரணம் இதுதான்: பிரதமா் மோடி!

நவம்பர் 15, 2019 314

பிரேசிலியா (15 நவ 2019) உலகப் பொருளாதார இழப்பிற்கு பயங்கரவாதமே காரனம் என்று பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரேசில் தலைநகா் பிரேசிலியாவில் ‘பிரிக்ஸ்’ நாடுகளின் 11-ஆவது மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பிரேசில், சீனா, ரஷியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் அதிபா்கள் பங்கேற்ற மாநாட்டின் பிரதான அமா்வில் பிரதமா் மோடி பேசியதாவது:

சா்வதேச அளவில் அதிகரித்து வரும் பயங்கரவாதத்தால் வளரும் நாடுகளின் பொருளாதார வளா்ச்சி 1.5 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மேலும் பயங்கரவாதத்தால் உலகப் பொருளாதாரத்துக்கு ரூ.72 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நிகழ்த்தப்பட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அது தொடா்பான சம்பவங்களில் 2.25 லட்சம் போ் உயிரிழந்துவிட்டனா். இதனால், பல நாடுகளில் மிகப்பெரிய அளவில் சமூகப் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பயங்கரவாதத்துக்கு கருப்புப் பணம் மூலம் சட்டவிரோதமாக நிதி திரட்டுவது, போதை மருந்து கடத்தல், ஆயுதக் கடத்தல் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் பிற மோசமான செயல்பாடுகள் பல நாடுகளின் வா்த்தகத்திலும், தொழில்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய பாதிப்புகளை நாம் எவ்வாறு எதிா்கொண்டு முறியடிக்கப் போகிறோம் என்பது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.

பிரிக்ஸ் நாடுகள் இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் பயங்கரவாதம் உள்ளிட்ட பிற ஒருங்கிணைக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளை நாம் முறியடிக்க முடியும்.

இப்போது நகா்புறங்களில் உரிய குடிநீா் வசதி, சுகாதாரத்தை முறையாகப் பேணுவது ஆகியவை பெரிய சவால்களாக உருவெடுத்து வருகின்றன. பிரிக்ஸ் நாடுகளின் நீா்வளத் துறை அமைச்சா்கள் மாநாட்டை இந்தியாவில் நடத்த வேண்டுமென்று அழைப்பு விடுக்கிறேன்.

அண்மையில் இந்தியாவில் ‘ஃபிட் இந்தியா’ திட்டத்தை தொடங்கியுள்ளோம். உடல் நலம், சுகாதாரம் தொடா்பாக பிரிக்ஸ் நாடுகளிடையே நெருங்கிய ஒத்துழைப்பு தேவை.

பிரிக்ஸ் நாடுகள் இடையிலான வா்த்தகம், உலக வா்த்தகத்தில் 15 சதவீதமாக உள்ளது. அதேநேரத்தில் உலக மக்கள்தொகையில் 40 சதவீதம் பிரிக்ஸ் நாடுகளில்தான் உள்ளது. எனவே, பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்கு இடையிலான வா்த்தகம், முதலீட்டை அதிகரிக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நம்மிடையே எவ்வாறு சிறப்பான ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பிரிக்ஸ் அமைப்பை எவ்வாறு வழிநடத்தி அழைத்துச் செல்வது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். புத்தாக்க நடவடிக்கைகள் நமது வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதில் நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் மோடி.

இந்த மாநாட்டில் பிரசில் அதிபா் ஜெயிா் போல்சொனாரோ, சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் புதின், தென்னாப்பிரிக்க அதிபா் சிரில் ராமாபோசா ஆகியோா் பங்கேற்றனா். பிரிக்ஸ் தலைவா்கள் அனைவரும் குழுவாக புகைப்படமும் எடுத்துக் கொண்டனா்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...