பாஜகவுக்கு புத்தி சுவாதீனம் இல்லை - சிவசேனா கடும் விமர்சனம்!

நவம்பர் 16, 2019 285

மும்பை (16 நவ 2019): பாஜகவுக்கு புத்தி சுவாதீனம் இல்லை என்று சிவசேனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக சிவசேனா இடையே முதல்வர் பதவிக்கு வந்த போட்டியால் விரிசல் ஏற்பட்டது. அதுமுதல் சிவசேனா பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் சாம்னா பத்திரிகையில் உள்ள தலையங்கத்தில், "பாஜக தங்கள் பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்காக மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுகிறது, இந்த செயல் அவர்களின் மன நிலைக்கு ஆபத்தானது" என்று எழுதியுள்ளது.

பாஜகவுக்கு மோடியின் பெயரில் வாக்குகள் கிடைத்து வருகிறது. ஆனால் தற்போது பாஜகவின் நடவடிக்கையால் மோடி ஜியின் பெயர் கெட்டுப்போகிறது. மேலும் சாம்னா மூலம் கேள்வி எழுப்பிய சிவசேனா, மாநிலத்தில் அரசாங்கத்தை அமைக்க பெரும்பான்மை இல்லாமல் ஆளுநரிடம் ஆட்சி அமைக்கும் கோரிக்கையை வைக்க முடியாமல் இருந்த பாஜக, தற்போது ஜனாதிபதியின் ஆட்சி திணிக்கப்பட்ட பின்னர், திடீரென பாஜக எவ்வாறு அரசாங்கத்தை அமைப்பதாகக் கூறுகிறது? என்க் கேட்டுள்ளது. பாஜகவுக்கு அதிகார மோகம் பைத்தியம் என்று சிவசேனா கூறியதுடன், பைத்தியக்காரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அரசின் நற்பெயருக்கு ஒரு தடையாகும் என்றும் கூறியுள்ளது.

மஹாராஷ்டிராவில் (Maharashtra) ஆட்சி அமைப்பதற்கு தீவிரமாக முயற்சித்து வரும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே அமைச்சரவையில் ஒதுக்கப்படும் இடங்கள் குறித்து பேசி முடிவுக்கு வந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இம் மூன்று கட்சிகளிடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி அமைச்சரவையில் சிவசேனாவுக்கு 16 அமைச்சர் பதவிகளும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ்-க்கு 14 பதவிகளும், காங்கிரசுக்கு 12 பதவிகளும் ஒதுக்கப்படுவதாக பேசி முடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று காங்கிரசுக்கு சபாநாயகர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதாம். துணை சபாநாயகர் பதவி சிவசேனாவுக்கும், சட்டசபை கவுன்சில் தலைவர் பதவி தேசியவாத காங்கிரசுக்கும், அதன் துணை தலைவர் பதவி சிவசேனாவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், மராட்டியத்தில் சிவசேனாவை சேர்ந்தவரே முதல்வராவதை யாரும் தடுக்க முடியாது என சஞ்சய் ராவத் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...