நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள பெண்களை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு!

நவம்பர் 19, 2019 247

புதுடெல்லி (19 நவ 2019): சுவாமி நித்யானந்தா நடத்தும் ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது இரண்டு மகள்களை மீட்டுத் தர உதவுமாறு ஜனார்த்தன ஷர்மா என்பவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்தனா ஷர்மா, கடந்த 2016ல் நித்யானந்தாவின் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். தொடர்ந்து, பதவி உயர்வு பெற்று நித்யானந்தாவின் தனிப்பட்ட செயலர்களில் ஒருவராக ஆனார். இதையடுத்து, 7 முதல் 15 வயது வரையிலான தனது மூன்று மகள்களையும் பெங்களூரில் சுவாமி நித்யானந்தா நடத்தும் கல்வி நிறுவனத்தில் சேர்த்துள்ளார். இதன்பின்னர், பெங்களுருவில் இருந்து அஹமதாபாத்திற்கு அவர்கள் மாற்றப்பட்ட செய்தியறிந்த ஷர்மா, அங்கு மகள்களை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது ஆசிரமத்தில் உள்ளவர்கள், அவரை உள்ளே அனுமதிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் காவல்துறையின் உதவியுடன் ஒரு மகளை அழைத்து வந்துவிட்டார். ஆனால் அவர்களது மூத்த மகள்களான லோபமுத்ரா ஜனார்த்தனா சர்மா (21) மற்றும் நந்திதா (18) ஆகியோர் வர மறுத்துவிட்டனர். இதையடுத்து ஷர்மா, தனது மகள்களை மீட்டுத் தருமாறு குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். தங்களது இரண்டு மகள்களை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்துவதுடன், அவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு ஜனார்த்தன ஷர்மா தம்பதியினர் கோரியுள்ளனர். முன்னதாக, காவல்துறையும், குஜராத் மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

இந்நிலையில், நித்யானந்திதா என்ற பெண், சில நாட்களுக்கு முன்பு பகிரப்பட்ட வீடியோவில் தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே ஆசிரமத்தில் வசிப்பதாக அவர் கூறியுள்ளார்.

அவர் பேசியதாவது: நான் கடந்த 6 ஆண்டுகளாக இந்த ஆசிரமத்தில் வசித்து வருகிறேன். கடந்த 6 ஆண்டுகளில் நான் இங்கு தங்கியிருப்பதை மகிழ்ச்சியாக அனுபவித்து வருகிறேன், இந்தப் பாதையை நானே தானாக முன்வந்து தேர்ந்தெடுத்துள்ளேன். நான் இங்கு ஒரு சன்னியாசியாக வாழ்ந்து வருகிறேன். இதில், எனது பெற்றோரை அல்லது வேறு யாரையும் தொடர்பு கொள்ளவோ ​​நான் விரும்பவில்லை. நான் இங்கு பாதுகாப்பாக இருக்கிறேன். சுவாமிஜியும், இங்கு இருப்பவர்களும் கவனித்து வருவதால் இங்கு இருக்கவே விரும்புகிறேன்' என்று வீடியோவில் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், பெண்ணின் பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கு விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...