மதத்தின் அடிப்படையிலான பாகுபாட்டுக்கு பாப்புலர் ஃப்ரெண்ட் கண்டனம்!

நவம்பர் 23, 2019 241

புதுடெல்லி (22 நவ 2019): தேசிய குடியுரிமை பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கான உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நகர்வை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் எம்.முஹம்மது அலி ஜின்னா கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேசிய அளவில் NRCயை நடைமுறைப்படுத்துவதற்கான தயாரிப்புகளில் அரசாங்கம் உள்ளதாக மாநிலங்களவையில் அமித் ஷா அறிவித்தார். எந்த மதத்தைச் சார்ந்த எவரும் இத்திட்டம் குறித்து கவலை கொள்ள வேண்டாம் என்று அவர் கூறினாலும் அசாம் மாநிலத்தில் என் ஆர் சி நடைமுறையில் கண்டதை போல் அவரின் உறுதிமொழிகள் அர்த்தமற்றவை என்பது தெளிவாகிறது. பல மாதங்கள் நீடித்த, அசாம் மக்கள் மீது பேரழிவை ஏற்படுத்திய இம்முறை ஒரு கூட்டு தண்டனையாகவே மாறியது. 20 லட்சம் இந்தியர்களை நாடற்றவர்களாக்கி அவர்களை வறுமை மற்றும் அச்ச நிலைக்கு தள்ளியது. 2014ல் இருந்து நாடு விழுந்துள்ள பொருளாதார படுகொலையில் இருந்து கவனத்தை திசை திருப்புவதை தவிர தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதற்கான எந்த ஒரு நியாயமான காரணமும் இல்லை.

என்.ஆர்.சி.யுடன் இணைத்து முஸ்லிம் அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை மறுக்கும் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த மசோதாவை அரசாங்கம் முன்னெடுக்கிறது. மதத்தின் அடிப்படையிலான இந்த வெளிப்படையான பாகுபாடு மதச்சார்பின்மை மற்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசியல் சாசன கொள்கைகள் மீதான அப்பட்டமான தாக்குதலாகும். மத அடிப்படையிலான பாகுபாட்டுக்கு எதிரான சர்வதேச சட்டங்களையும் இது அலட்சியப் படுத்துகிறது.

துரதிஷ்டவசமாக இத்தகைய எதேச்சதிகார நகர்வுகளுக்கு எதிராக நாட்டில் ஒரு பொதுவான அலட்சியமும் அக்கறையின்மையும் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் அல்லது இதர மதச்சார்பற்ற கட்சிகளால் பெருமளவில் கேள்விகள் எழுப்பப்படவில்லை. இத்தகைய நடைமுறைகளை நிராகரித்து குடியுரிமைகள் மற்றும் நாட்டின் அரசியல் சாசன மதிப்பீடுகளை பாதுகாப்பதற்காக ஒருங்கிணைந்த போராட்டத்தை முன்னெடுக்குமாறு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...