ஆபாச இணையதளங்களை முடக்க உத்தரவு - மத்திய அமைச்சர் தகவல்!

டிசம்பர் 01, 2019 281

புதுடெல்லி (01 டிச 2019): இந்தியாவில் சுமார் 377 ஆபாச இணையதளங்களை முடக்க உத்தரவிட்டிருப்பதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக பெருகி வரும் பாலியல் வன்முறைகளை கட்டுப்படுத்த ஆபாச இணைய தளங்களை முடக்க என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்? என்று மாநிலங்களவை கேள்வி நேரத்தின் போது அதிமுக உறுப்பினர் விஜிலா சத்யானந்த் கேள்வி எழுப்பினார்.

மேலும் ஸ்மார்ட் போன்களிலும் , கணினிகளிலும் எளிதில் ஆபாசப் படங்களையும், விடியோக்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடிவதால் அதைக் காணும் ஆண்கள் வரைமுறையின்றி பிறந்த குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை அனைவரையும் பாலியல் கண்ணோட்டத்துடனே அணுகுகின்றனர் இதில் குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்படும் சம்பவங்கள் மிகவும் கொடுமையானவை. தேசிய பாதுகாப்பு ஆணையத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துவது தொடர்பாக சுமார் 5,951 புகார்கள் பதிவாகியுள்ளன. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் 17 வயதுக்குட்பட்ட 1 மில்லியன் பெண் குழந்தைகள் உடல் ரீதியிலான பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதற்கு தக்க நடவடிக்கை தேவை என விஜிலா பேசினார். அவரது பேச்சை அனைத்து உறுப்பினர்களும் ஆதரித்தனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, இது தொடர்பாக சுமார் 50 எஃப் ஐ ஆர்கள் போடப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் சுமார் 377 இணையதளங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவற்றை நீக்கும் உத்தரவும் இடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...