பிரியங்கா சோப்ரா வாழ்க - குழம்பிய காங்கிரஸ்!

டிசம்பர் 03, 2019 159

புதுடெல்லி (03 டிச 2019): காங்கிரஸ் கூட்டத்தில் பிரியங்கா சோப்ரா வாழ்க என்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சி சார்பாக டெல்லியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திர குமார் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசி முடித்ததும் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் பெயர்களை வேகமாக முழங்கினார். அதற்கு கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் ஜிந்தாபாத் எனக் கூறி ஆரவாரம் செய்தனர்.

சோனியா காந்தி வாழ்க, காங்கிரஸ் கட்சி வாழ்க என்று கூறிய அவர், பிரியங்கா காந்தி வாழ்க என்பதற்கு பதிலாக பிரியங்கா சோப்ரா வாழ்க என்று முழங்கினர். இதற்கும் அங்கிருந்த தொண்டர்கள் ஜிந்தாபாத் என்று கத்தினர். பின்னர் தனது தவறை திருத்திக் கொண்ட சுரேந்திர குமார், தவாறக தெரிவித்துவிட்டேன் என்று கூட்டத்தில் மன்னிப்புக்கேட்டார். இருப்பினும் அவர் தவறுதலாக பிரியங்கா சோப்ரா என்று கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் அகாலிதள கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மஞ்ஜிந்தர் சிங், தனது டிவிட்டர் பக்கத்தில் "காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டங்களில் பிரியங்கா சோப்ரா வாழ்க என்று முழங்கப்படுகிறது. அந்த கட்சியே பப்புவாகிவிட்டது" என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...