மதுக்கடையில் மது வாங்கிக்குடித்த 6 பேர் பலி!

222

ரேபரேலி (27 ஜன 2022): உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மதுபான கடையில் மது வாங்கி பருகிய ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். பலர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்குள்ள பஹார்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் ஐவர் மற்றும் மூன்று கலால் துறை அதிகாரிகள் என 8 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை அன்று இரவு நடைபெற்ற விசேச நிகழ்வில் பங்கேற்ற சிலர் மதுபானம் வாங்கிப் பருகி உள்ளனர். அதன் பிறகே அவர்களது உடல்நலம் பாதிக்கப்பட்டது என நீதிபதி வைபவ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

அவர்கள் பருகிய மது வகையின் மாதிரி சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கலால் சட்டத்தின் பிரிவுகளுடன் இந்திய தண்டனை சட்ட பிரிவு 272 (உணவு மற்றும் பானங்களில் கலப்படம்), 273 (தீங்கு விளைவிக்கும் உணவு மற்றும் பானங்கள் விற்பனை), 304 ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.