உத்திர பிரதேச விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 9 பேர் பலி!

Share this News:

லக்னோ (04 அக் 2021): உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தலைநகர் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களில் பத்து மாதங்களுக்கும் மேலாக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள லக்கிம்பூர் மாவட்டத்திலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.

இந்நிலையில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, லக்கிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அந்த மாவட்டத்திலுள்ள பன்வீர்பூர் கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு அந்த மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவிருந்தார்.

இதனிடையே துணை முதல்வரை வரவேற்க ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா தனது வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார் எனச் சொல்லப்படுகிறது.

அப்போது அவரது காரை வழிமறித்து விவசாயிகள் கறுப்புக்கொடி காட்டி, கோஷங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

அப்போது அங்கிருந்த வாகனம் மிக வேகமாகக் கிளம்பிச் சென்றிருக்கிறது. வாகனம் கிளம்பிச் செல்லும்போது விவசாயிகளின் மீது இடித்துத் தள்ளிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர் என்று தகவல் வெளியானது. இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அந்த காரில் இருந்தவர்களைத் தாக்கியதோடு அந்தக் காரையும் அடித்து நொறுக்கித் தீயிட்டுக் கொளுத்தியதால் அசாதாரண சூழல் நிலவியது.

இதனால் லக்கிம்பூர் மாவட்டத்தில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது. அந்த இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்தியபோது அங்கு வன்முறை வெடித்திருக்கிறது. இந்தக் கலவரத்தில் நான்கு பேர் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறார்கள்.

இதுவரை விவசாயிகள், பாஜக-வைச் சேர்ந்தவர்கள், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட ஒன்பது பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.


Share this News:

Leave a Reply