இந்து தலைவர் படுகொலையில் திடீர் திருப்பம்!

Share this News:

லக்னோ (07 பிப் 2020): உத்திர பிரதேசம் விஸ்வ இந்து மஹாசபா தலைவர் ரஞ்சித் பச்சன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஜிதேந்திரா என்ற ரஞ்சித் பச்சனின் மனைவியின் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்திர பிரதேசம் விஸ்வ ஹிந்து மகாசபா தலைவர் ரஞ்சித் பச்சன் கடந்த (ஞாயிற்றுக் கிழமை) காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள், ரஞ்சித் பச்சன் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில், தலையில், பலத்த காயமடைந்த ரஞ்சித், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ரஞ்சித்துடன் சென்ற அவரின் சகோதரருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக ரஞ்சித்தின் இரண்டாவது மனைவி ஸ்ம்ரிதி ஸ்ரீவஸ்தவா மற்றும் அவரது கார் ஓட்டுநர் சஞ்ஜீத் கௌதமையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் ஸ்மிரிதியும் அவரது காதலர் திபேந்திராவும் இணைந்தே இந்த கொலையை செய்தனர் என்று தெரிய வந்தது. இதனை அடுத்து திபேந்திராவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

ரஞ்சித்தைக் கொலை செய்ய ஸ்மிர்தி கூறிய காரணம் பற்றி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் லக்னோ போலீஸ் கமிஷனர் சுஜித் பாண்டே, “ரஞ்சித் தன் முதல் மனைவியுடன் லக்னோ ஓ.சி.ஆர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

அவரது இரண்டாவது மனைவியான ஸ்மிர்தி அரசு வேலையில் இருக்கிறார். இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் ரஞ்சித்துக்கும் ஸ்மிர்திக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது, இதனால் கடந்த 2016-ம் ஆண்டு ரஞ்சித்திடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார் ஸ்மிர்தி.

ஆனால் ரஞ்சித், விவாகரத்து தராமலும் நீதிமன்றத்தில் ஆஜராகாமலும் தொடர்ந்து இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் ஸ்மிர்தி – திபேந்திராவின் திருமணம் தொடர்ந்து தள்ளிப்போய்க் கொண்டே இருந்துள்ளது.

இந்த விவகாரத்துக்கு ஒரு முடிவு கட்டவே அனைவரும் இணைந்து திட்டம் போட்டு ரஞ்சித்தைக் கொலை செய்துள்ளனர். இந்தக் கொலைக்கு திபேந்திரா மூளையாகச் செயல்பட்டுள்ளார். இதற்கு ஸ்மிர்தி உள்ளிட்ட சிலரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

திபேந்திரா, ஸ்மிர்தி, டிரைவர் சஞ்ஜீத் கௌதம் மற்றும் துப்பாக்கியால் சுட்ட ஜிதேந்திரா ஆகிய நான்கு பேரும் பிப்ரவரி 1-ம் தேதி ரேபரேலியில் ஒன்றாகக் கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர். பிறகு அன்று நள்ளிரவு திபேந்திராவும் ஜிதேந்திராவும் மட்டும் லக்னோ வந்துள்ளனர்.

அதிகாலை 5:40 மணிக்கு ஹஸ்ரட்கன்ச் பகுதியில் ஜிதேந்திராவை மட்டும் இறக்கி விட்டுவிட்டு திபேந்திரா சென்றுவிட்டார். அப்போது முதல் ரஞ்சித்தின் வருகைக்காகக் காத்திருந்த ஜிதேந்திரா, அவரின் வீட்டிலிருந்து பின் தொடர்ந்து சரியான இடம் பார்த்து துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பி ஓடியுள்ளார்” என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், இந்த வாரத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் லக்னோ போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ரஞ்சித் பச்சன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு உட்பட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply