முரண்டு பிடித்த போலீஸ் – போராடி வென்ற ஆத்தியா ஃபிர்தவ்ஸ் !

Share this News:

லக்னோ (12 ஜூன் 2020): மத வெறுப்பூட்டும் வகையில் பேசிய மருத்துவர் அரத்தி தேவ் லால்சந்தானி (Arati Dave Lalchandani) மீது வழக்கு தொடுக்க போலீஸ் மறுத்தபோதும் சட்ட நுணுக்கங்களை கூறி வழக்கு பதிவு செய்ய வைத்துள்ளார் கேம்பஸ் ஃப்ரண்ட்டைச் சேர்ந்த ஆத்தியா ஃபிர்தவ்ஸ்.

கடந்த ஜுன் 2 அன்று உ.பி. கான்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவத்துறை முதல்வர் மருத்துவர் அரத்தி லால் சந்தானி அதே கல்லூரியின் மருத்துவமனையில் கொரோனா-வுக்காக சிகிச்சை பெற்றுவரும் முஸ்லிம்களை “தீவிரவாதிகள்” என்று மதவெறியோடு பேசும் காணொளி வலைதளத்தில் பரபரப்பாக பகிரப்பட்டது.

மேலும் அதில் அவர் முஸ்லிம்களுக்கு சிகிச்சையளிப்பதை நிறுத்திவிட்டு அவர்களை காட்டுக்கு அடித்து விரட்ட வேண்டும் என்றும் பேசினார். மருத்துவர் அரத்தியின் இந்த இஸ்லாமிய வெறுப்பு பேச்சிற்கு மிகப்பெரிய கண்டனம் எழுந்தது.

எதிர்ப்புக்குரல் அதிகம் எழுந்ததால் அரத்தி தனது இஸ்லாமிய வெறுப்பு பேச்சிற்காக மன்னிப்புக் கோரினார்.

எனினும், இந்த மன்னிப்பு போதாது என்றும், இந்த இஸ்லாமிய வெறுப்பு சம்பவத்திற்காக மருத்துவர் ஆர்த்தி கைது செய்யப்பட வேண்டும் என்றும் கூறி, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் தேசிய துணைத்தலைவர் ஆத்தியா ஃபிர்தவ்ஸ் சமூக வலைத்தளத்தில் #ArrestDrAaarti என்ற ஹேஷ் டேக் பிரச்சாரத்தை நடத்தினார்.

மருத்துவர் ஆர்த்தி மீது உ.பி. மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்தியா இதற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை தனது சொந்த மாநிலமான இராஜஸ்தான் கோட்டாவில் தொடங்கினார். மருத்துவர் ஆர்த்தி மீது வழக்கு பதிவு செய்ய முடிவெடுத்து கோட்டா மாவட்ட காவல்துறையிடம் புகார் அளித்தார். ஆனால் சம்பவம் நடந்த மாநிலம் உ.பி. என்றும் அதற்கு இங்கு வழக்கு பதிவு செய்ய இயலாது என்றும் காவல்துறை மறுத்தது.

ஆனால் இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் மூலம் இஸ்லாமிய வெறுப்பு பேச்சிற்காக மருத்துவர் ஆர்த்தி மீது யார் வேண்டுமென்றாலும் எங்கிருந்தும் புகார் அளிக்கலாம் என்பதை ஆத்தியா காவல்துறையிடம் விளக்கினார். பிறகு பல கட்ட முயற்ச்சிக்கு பிறகு மருத்துவர் ஆர்த்தி மீது FIR பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கிற்காக தான் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று எங்கு வேண்டுமென்றாலும் செல்வேன் என்றும் ஆர்த்தி மருத்துவ உரிமம் பறிக்கப்பட்டு, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆத்தியா உறுதியாக கூறினார்.

ஆத்தியா பல்வேறு போராட்டங்களில் தற்போது வரை அதே துடிப்போடு களமாடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News: