உத்திரபிரதேச தேர்தலில் சிறை‌யி‌ல் இருந்தபடி போட்டியிடும் ஆசம்கான் நஹித் ஹசன்!

268

லக்னோ (25 ஜன 2022): உத்திரபிரதேச சட்டசபைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள் முகமது ஆசம் கான் மற்றும் நஹித் ஹசன் ஆகியோர் சிறையில் இருந்தபடி போட்டியிடுகின்றனர்.

ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி எம்.பி.யான முகமது ஆசம் கான் அக்கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆசம் கான் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பிப்ரவரி 2020 முதல் சிறையில் உள்ளார். உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அவர் தீர்ப்புக்காக காத்திருக்கிறார்.

இதற்கிடையில், அவரது மனைவி தன்சீன் பாத்திமா மற்றும் மகன் அப்துல்லா ஆசம் ராம்பூரில் அவருக்காக பிரச்சாரம் செய்வார்கள். அப்துல்லா ஆசம் சுவார் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக உள்ளார், தற்போது ஜாமீனில் உள்ளார்.

எருமை திருட்டு, புத்தகத் திருட்டு, சிலை திருட்டு, ஆடு திருட்டு போன்ற அற்பமான வழக்குகளில் ஆசம் கான் மீது யோகி ஆதித்யநாத் அரசு வழக்குப்பதிவு செய்ததில் ஆசம் கான் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அதீத அனுதாபம் ஏற்பட்டுள்ளது. கட்சியின் மூத்ததலைவர்கள் அவரது வெற்றியை உறுதி செய்வதற்காக
அவருக்கான பிரச்சாரத்தில் இணைவார்கள் என்று எஸ்.பி. கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கைரானாவைச் சேர்ந்த நஹித் ஹசன், சிறையிலிருந்தபடி போட்டியிடும் மற்றொரு எஸ்.பி. தலைவர். அவரது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி திங்கள்கிழமை ஏற்றுக்கொண்டார்.

கைரானாவின் தற்போதைய எம்.எல்.ஏ.வான நஹித், ஜனவரி 15-ம் தேதி உ.பி. காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பிப்ரவரி 2021 இல் நடந்த ஒரு சம்பவத்திற்காக காவ‌ல்துறை‌யின‌ர் அவர் மீது குண்டர்கள் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அவர் ஷாம்லியின் எம்பி/எம்எல்ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

நஹித் கைது செய்யப்பட்ட உடனேயே, லண்டனில் இருந்து திரும்பிய அவரது சகோதரி இக்ரா ஹசன் தனது சகோதரரின் சார்பாக பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.

“எனது தாயும் முன்னாள் எம்பியுமான தபசும் ஹசன் மற்றும் சகோதரர் நஹித் ஆகியோர் பொய் வழக்குகளில் சிக்கியுள்ளனர்” என்று இக்ரா தனது சகோதரருக்காக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.