கங்கனா ரணாவத்தின் கன்னங்களை விட மிருதுவான சாலைகள் – காங்கிரஸ் எம்.எல்.ஏ உறுதி!

215

ஜார்கண்ட் (15 ஜன 2022):  தனது தொகுதியில் நடிகை கங்கனா ரணாவத்தின் கன்னங்களை விட மிருதுவான சாலைகள் அமைக்கப்படும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ இர்ஃபான் அன்சாரி தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோச்சா, காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது, இந்நிலையில் அம்மாநிலத்தின் ஜமதரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவான டாக்டர். இர்ஃபான் அன்சாரி தனது தொகுதியில் உள்ள சாலைகள் நடிகை கங்கனாவின் கன்னத்தைவிட மென்மையானவையாக அமைக்கப்படும் என உறுதி அளித்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்திலும் அவர் பதிவேற்றியுள்ளார்.

அந்த வீடியோவில் எம்.எல்.ஏ கூறியிருப்பதாவது, ”திரைப்பட நடிகை கங்கனா ரணாவத்தின் கன்னங்களை விட ஜம்தாரா தொகுதியின் சாலைகள் மென்மையாக அமைக்கப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன். 14 உலகத் தரம் வாய்ந்த சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  பிரபல ஊடகவியலாளர் முஹம்மது ஜுபைர் கைது!

இதற்கு முன்னர் யாரும் முகக்கவசங்களை நீண்ட நேரம் அணியக் கூடாது. அது உடல்நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். முகக்கவசத்தை நீண்ட நேரம் அணிவதால், உடலில் இருந்து வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைடு வாயுவையே மீண்டும் உள்ளிருக்க நேரிடும் என அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே கொரோனா பரவல் உச்சத்தில் இருந்து வரும் நேரத்தில் முகக்கவசம் அணிவது மட்டுமே பாதுகாப்பானது என்றாகிவிட்ட நிலையில், முகக்கவசத்துக்கு எதிரான எம்.எல்.ஏவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் அவர் தான் இதை ஒரு டாக்டர் என்ற முறையில் கூறுகிறேன் என விளக்கம் அளித்திருந்தார். மேலும் அன்சாரியின் பேச்சு எதிர்கட்சி முகாமிலும், சொந்தக் கட்சினராலும் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.