மோடி அரசு செய்தது தேச துரோகம் – பெகாசஸ் விவகாரத்தில் காங்கிரஸ் குற்றச்சாட்டு!

481

புது டெல்லி (29 ஜன 2022): இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது.

இந்தியாவில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, 8 வாரங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.

இந்நிலையில் பிரபல அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்ஸ், பெகாசஸ் மென்பொருளை உலக நாடுகள் வாங்கியது குறித்தும், அவற்றை எப்படி பயன்படுத்தியது என்பது குறித்தும் விரிவான புலனாய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியா கடந்த 2017-ம் ஆண்டு பெகாசஸ் மென்பொருளை வாங்கியதாக கூறியுள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  பாப்புலர் ஃப்ரெண்டுக்கும் எஸ்டிபிஐக்கும் உள்ள தொடர்பு குறித்து எந்த ஆதாரமும் இல்லை - தலைமை தேர்தல் ஆணையம்!

இதையடுத்து பெகாசஸ் விவகாரம் குறித்து பாராளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் மத்திய அரசு இதுவரை பொய் கூறி வந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி கடும் குற்றச்சாட்டை வைத்துள்ளது.

நமது ஜனநாயகத்தை அச்சுறுத்தும் வகையில், அரசியல்வாதிகள், பொதுமக்கள், அரசு அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், ஆயுதப் படைகள், நீதித்துறை என அனைவரது தொலைபேசிகளையும் ஒட்டுக்கேட்டு, உளவு பார்க்கவே பெகாசஸ் மென்பொருளை மோடி அரசு வாங்கியுள்ளது. என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.