கொரோனா மரணங்களில் சீனாவை முந்திய இந்தியா!

Share this News:

புதுடெல்லி (29 மே 2020): கொரோனா மரணங்களில் இந்தியா சீனாவை முந்தியுள்ளது. மேலும் உலக அளவில் 9 ஆவது இடத்தில் உள்ளது.

உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு தரவரிசையில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளதுடன் இறப்பு எண்ணிக்கையில் சீனாவை முந்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு முதன் முதலில் கடந்த டிசம்பரில் சீனாவில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் இது உலகெங்கிலும் உள்ள நாடுகளில் கிட்டத்தட்ட 59 லட்சத்துக்கும் அதிகமான மக்களைப் பாதித்து உள்ளது. கொரோனா பாதிப்பால் உலகெங்கிலும் 3.5 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாக சீனாவில் மிகக் குறைவான புதிய பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

இந்தியாவில் மொத்தம் 1,65,386 கொரோனா பாதிப்புகள் உள்ளன. சீனாவின் 84,106 பாதிப்புகளை விட இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தால் பராமரிக்கப்படும் ஆன்லைன் நிகழ்நேர புள்ளிவிவரம் காட்டுகிறது. சீனாவில் இறப்புகள் வியாழக்கிழமை இரவு 4,638 ஆக இருந்த நிலையில், இந்தியாவும் 4,711 இறப்புகளுடன் சீனாவை விஞ்சியுள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட மொத்த பாதிப்புகளின் அடிப்படையில், அமெரிக்காவில் 17 லட்சத்துக்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் இந்தியாவை விட அதிகமான பாதிப்புகள் உள்ள மற்ற நாடுகள் பிரேசில், ரஷ்யா, இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி. துருக்கி இப்போது 10-வது இடத்தில் உள்ளது. ஈரான், பெரு மற்றும் கனடா முறையே 11, 12, 13​​ இடங்களில் உள்ளன. சீனா 14 வது இடத்தில் உள்ளது.

1 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகளுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரேசில், பெல்ஜியம், மெக்சிகோ, ஜெர்மனி மற்றும் ஈரான் ஆகியவை முதல் 10 இடங்களில் உள்ளன. கனடா மற்றும் நெதர்லாந்திற்கு முறையே 11 மற்றும் 12 வது இடங்கள். அடுத்தபடியாக இந்தியா 13 வது இடத்தில் உள்ளது.


Share this News: