முன்னாள் பிரதமருக்கு ரூ 2 கோடி அபராதம் – வெளியில் பேச தடை!

600

புதுடெல்லி (23 ஜூன் 2021): முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் 2 கோடி ரூபாய் அபராதம் விதித்து பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தனியார் உட்கட்டமைப்பு நிறுவனமான Nandi Infrastructure Corridor Enterprise Limited (NICE) என்ற நிறுவனம் பெங்களூரு-மைசூர் இடையே உட்கட்டமைப்பு திட்டத்தை மேற்கொண்டது. இது இந்தியாவிலேயே மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டமாகப் பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய தேவகவுடா, நந்தி நிறுவனம் மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பதற்காகவே இத்திட்டத்தில் ஒப்பந்தம் செய்ததாகக் கூறினார். அதுமட்டுமில்லாமல் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் அசோக் கெனி மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அசோக் கெனி ஒரு நில அபகரிப்பு மாஃபியா தலைவன் என்றும் கூறினார்.

இதைப் படிச்சீங்களா?:  பாப்புலர் ஃப்ரெண்டுக்கும் எஸ்டிபிஐக்கும் உள்ள தொடர்பு குறித்து எந்த ஆதாரமும் இல்லை - தலைமை தேர்தல் ஆணையம்!

இதையடுத்து 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டும், தங்கள் நிறுவனம் சார்ந்து பேசுவதற்கு தேவகவுடாவுக்கு நிரந்தர தடை விதிக்கக் கோரியும் நந்தி நிறுவனம் பெங்களூரு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தேவகவுடா முன்வைத்ததாக நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் கருத்து சுதந்திரத்தை மேற்கோள் காட்டி கவுடா தரப்பில் வாதிடப்பட்டது.

இப்படியாக சுமார் 10 வருடங்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பின் தீர்ப்பு வாசிக்கப்பட்டுள்ளது. அதன்படி நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கள் விளைவிக்கும் வகையில் பேசியதால் தேவகவுடா 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இனிமேல் எந்தவொரு ஊடகத்திலும் பொதுவெளியிலும் நந்தி நிறுவனம் குறித்து பேச நிரந்தர தடை விதிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.