இந்தியாவில் ஒரேநாளில் 40 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

372

புதுடெல்லி (20 மார்ச் 2021): இந்தியாவில் ஒரே நாளில் 40 ஆயிரத்துக்‍கும் மேற்பட்டோருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் குறைந்து வந்த கொரோனா பரவல், கடந்த ஒரு மாத காலமாக மீண்டும் உயர்ந்து வருகிறது. மஹாராஷ்ட்ரா, கேரளா, குஜராத், பஞ்சாப், தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 19 மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்‍கப்படுவோரின் எண்ணிக்‍கை அதிரடியாக அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் வெகுநாட்களுக்‍கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்‍கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒரே நாளில், 40 ஆயிரத்து 953 பேருக்‍கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியே 15 லட்சத்து 55 ஆயிரத்து 284-ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 188 பேர் மரணமடைந்து உள்ளதாகவும், மொத்த பலி எண்ணிக்‍கை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 558-ஆக அதிகரித்துள்ளதாகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.