தனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பாற்றிய டாக்டர் ஜாஹித்!

புதுடெல்லி (10 மே 2020): நோன்பு திறக்கும் நேரம் நெருங்கிவிட்டது. டாக்டர் ஜாஹித் நோன்பு திறப்பதற்காக அமர்ந்து பிரார்த்தனையில் இருந்தார். அப்போது அவருக்கு அவசர அழைப்பு வந்தது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு மருத்துவராக பணிபுரிபவர் டாக்டர் ஜாஹித். கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நோயாளியை ஆம்புலன்சிலிருந்து அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்ற வேண்டும். அதற்கு டாக்டர் ஜாஹிதின் உதவி தேவை. அதற்கான அழைப்புதான் அப்போது ஜாஹிதுக்கு வந்திருந்தது.

உடனே அங்கிருந்து நகர்ந்த ஜாஹித், நோயாளி இருந்த ஆம்புலன்சிற்கு சென்றார். அங்கு நோயாளிக்கு சரிவர வெண்டிலேட்டர் மாட்டப்படாமல் மூச்சுத் திணறிக் கொண்டு இருந்ததை உணர்ந்தார்.  கிட்டத்தட்ட மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்தார் நோயாளி.

அப்போது டாக்டர் ஜாஹிதுக்கு கொரோனா நோயாளிகளை கவனிக்கும் மருத்துவர்கள் அணியும் பாதுகாப்பு உடைகளை அணிந்திருந்தார். ஆனால் அவர் அணிந்திருந்த முகக்கவசம் நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படுத்தவே டாக்டர் ஜாஹிதின் பாதுகாப்பு குறித்து கவலைப் படாமல் தனது முகக்கவசத்தை நீக்கிவிட்டு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கத் துவங்கினார்.

இதனால் டாக்டர் ஜாஹிதுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருந்தபோதும் அதனைப் பற்றி கவலைப் படவில்லை. நோயாளியின் உயிர் அதைவிட மிக முக்கியம் என்பதை ஜாஹித் அப்போது உணர்ந்திருந்தார்.

இதைப் படிச்சீங்களா?:  தேச துரோக வழக்கில் சிறையில் உள்ள ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!

டாக்டர் ஜாஹிதின் செயலால் கொரோனா நோயாளி இறுதிக் கட்டத்திலிருந்து காப்பாற்றப் பட்டார். தற்போது டாக்டர் ஜாஹித் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்.

இந்த நெகிழ்வான தருணத்தை எய்ம்ஸ் மருத்துவமனையின் இன்னொரு மருத்துவரான ஹர்ஜித் சிங் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

ரம்ஜான் நோன்பு துறப்பை தள்ளிவைத்து, தன்னுயிரை துச்சமாக மதித்து, தகுந்த நேரத்தில் செயலாற்றி நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய மனிதநேய டாக்டர் ஜாஹிதுக்கு உலகெங்கிலும் வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன.