டெல்லி சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் ஜாஃபருல் இஸ்லாம் வீட்டில் போலீசார் திடீர் சோதனை!

புதுடெல்லி (07 மே 2020): டெல்லி சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் ஜாஃபருல் இஸ்லாம் கான் வீட்டில் டெல்லி போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் அரபுலகின் சமூக ஆர்வலர்கள் சிலர் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் அடக்குமுறைகள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இது இந்திய அரசியலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மேலும் அரபு நாடுகளில் இஸ்லாமிற்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் பாய்ந்து வருகிறது.

இந்நிலையில் இந்நிகழ்விற்கு ஆதரவாக ஜாஃபருல் இஸ்லாம் கான் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். சிறுபான்மை ஆணையராக இருந்துகொண்டு இதுபோன்ற பதிவுகள் பதிவது தேச துரோகம் என குற்றம் சாட்டி இவருக்கு எதிராக தேச துரோக வழக்கு பாய்ந்தது.

இதைப் படிச்சீங்களா?:  ஹிஜாபை அனுமதிக்கும் வகையில் 10 கல்லூரிகள் நிறுவ கர்நாடக வக்பு வாரியம் முடிவு!

இந்நிலையில் புதனன்று மாலை நோன்பு திறக்கும் சற்று நேரத்திற்கு முன்பு சைபர் க்ரைம் போலிசார் உட்பட சுமார் மூன்று டஜன் போலீசார் ஜாஃபருல் இஸ்லாம் கான் வீட்டிற்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ஜாஃபருல் இஸ்லாம் கானின் மொபைல் போன், சமூக ஊடக கணக்குகள் உள்ளிட்டவைகளையும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து ஜாஃபருல் இஸ்லாம் கானின் ஆலோசகர் விரிந்தா கோவர் இந்த சோதனையை உறுதி செய்ததோடு, இவரது விவகாரத்தில் சட்டப்படி முறையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மூத்த குடிமகனுக்கு கொடுக்கப்படும் சட்டப்படியான வரைமுறைகளை 72 வயதான ஜாஃபருல் இஸ்லாம் அவர்கள் மீதும் செயல்படுத்தப்பட வேண்டும். என்றும் தெரிவித்தார்.