அபாயகர அளவை தாண்டிய காற்று மாசு!

Share this News:

புதுடெல்லி (06 நவ 2021): தீபாவளி பண்டிகையின் பொழுது அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் டெல்லி நகரில் காற்று மாசுபாடு அபாயகர அளவை தாண்டியுள்ளது.

உலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள பெரு நகரங்களில் டெல்லி முதல் 3 இடங்களில் இருக்கிறது. பொதுவாகவே காற்று மாசு அதிகமாக காணப்படும் டெல்லியில் நேற்று அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதன் காரணமாக நேற்று மதியமே நகரின் பல இடங்களில் காற்று மாசின் அளவு மிகவும் மோசமான நிலையை எட்டியது. இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் காற்று மாசு அபாயகரமான அளவான 400ஐ தாண்டியது. சில இடங்களில் 650 புள்ளிகளாகவும், ஒரு சில இடங்களில் 705 புள்ளிகளாகவும் காற்று மாசு பதிவானது.

காற்று மாசு அளவு மானியில் 51லிருந்து 100 புள்ளிகள் வரை இருந்தால் காற்று திருப்திகரமாக அல்லது காற்று நன்றாக இருப்பதாக கருதப்படும். 100லிருந்து 200 புள்ளிகள் இருந்தால் காற்றில் ஓரளவு மாசு இருப்பதாக கருதப்படும். 201 புள்ளிகளில் இருந்து 300 புள்ளிகள் பதிவானால் காற்று மோசமாக இருப்பதாக கருதப்படும். ஆனால் டெல்லியில் பல இடங்களில் காற்று மாசு 655 புள்ளிகளாக பதிவாகி இருப்பதால் மிகவும் மோசம் என்ற நிலையினையும் தாண்டி அபாயகரமான அளவை எட்டியுள்ளது. இதற்கு பட்டாசு மட்டுமல்லாது அரியானா, பஞ்சாப்பில் வைக்கோலை கொளுத்துவதால் ஏற்பட்ட மாசு என்று காற்று மாசு அளவீடு மற்றும் வானிலை முன் அறிவிப்பு ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.


Share this News:

Leave a Reply