பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ 500 அபராதம் – மத்திய அரசு அதிரடி!

Share this News:

புதுடெல்லி (15 ஏப் 2020): பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ 500 அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக அளவில் அதி வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் எதிரொலியாக கடந்த மார்ச் 24ந்தேதி முதல் தொடர்ந்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

ஆனால், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் குறையவில்லை. இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே நேற்று காலை உரையாற்றும்பொழுது, மே 3ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என கூறினார். தொடர்ந்து அவர், ஏப்ரல் 20ந்தேதி வரை கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும். பின்னர் தளர்வுகள் இருக்கும் என கூறினார்.

இந்த நிலையில், ஊரடங்கு நீட்டிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டது. இதன்படி, பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான பால், மளிகை, மருந்து, உணவு பொருட்கள் விற்பனைக்கு அனுமதி வழங்கப்படுகிறது. எனினும், திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்றவைக்கு தடை தொடரும். மத நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. மத வழிபாட்டு தலங்களுக்கும் தடை நீடிக்கிறது.

ஆன்லைன் வழியே கல்வி நிறுவனங்கள் வகுப்புகளை நடத்தலாம். மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட விற்பனைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 100 நாள் வேலை திட்டத்துக்கும் அனுமதியளிக்கப்படுகிறது.

பொது இடங்களில் துப்பினால் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும். மாநிலங்கள், மாவட்டங்கள் இடையேயான மக்கள் போக்குவரத்துக்கு தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆகும். பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்படுகிறது.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்கள், பாதிப்பிற்காக முடக்கப்பட்ட மக்கள் வசித்த பகுதிகளில் தளர்வுகள் இல்லை. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


Share this News:

Leave a Reply