டெல்லியில் ஆம் ஆத்மியின் ஐந்து முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி!

Share this News:

புதுடெல்லி (12 பிப் 2020): நடைபெற்று முடிந்துள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக போட்டியிட்ட ஐந்து முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளதோடு, ஆம் ஆத்மி 62 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.

இந்நிலையில் ஆம் ஆத்மி சார்பில் ஐந்து முஸ்லிம் வேட்பாளர்களும் களத்தில் இறக்கப்பட்டனர். டெல்லியின் ஒக்லா தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் அமானத்துல்லா கான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பர்வேஸ் ஹஸ்மியை வெற்றி கண்டார். இந்த தொகுதியில் ஹஸ்மி டெபாசிட் கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீலம்பூர் தொகுதி வேட்பாளர் அப்துல் ரஹ்மான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சஞ்சய் ஜெயினை தோற்கடித்தார். அதேவேளை காங்கிரஸ் வேட்பாளரும், ஐந்து முறை எம்.எல்.ஏவாக இருந்தவருமான மடின் அகமதுவால் மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.

பல்லிமரான் தொகுதி வேட்பாளர் இம்ரான் ஹுசைன் பாஜகவின் லதா சோதியை தோற்கடித்தார். காங்கிரஸ் வேட்பாளரும் ஐந்து முறை எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான ஹாரூன் யூசுப் மூன்றாவது இடம்தான் பிடித்தார்.

மட்டியா மஹால் தொகுதியில் வேட்பாளர் சோயிப் இக்பால் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி வென்றார்.

முஸ்தபாபாத் தொகுதி வேட்பாளர் ஹாஜி யூனுஸ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ஜகதீஷ் பிரதானை வென்றார். இத்தொகுதியில் போட்டியிட்ட அலி மெஹ்தியால் ஐந்து இலக்க வாக்குகளையே தாண்ட இயலவில்லை.


Share this News:

Leave a Reply