உ.பி பாஜகவுக்கு நெருக்கடி – சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர் பாஜகவில் இருந்து விலகிய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்!

லக்னோ (14 ஜன 2022): உத்தரபிரதேசத்தில் பாஜக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் (எஸ்பி) இணைந்தனர்.

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் உறுப்பினர்களாக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா மற்றும் தரம் சிங் சைனி ஆகியோர் லக்னோவில் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொண்டனர்.

இவர்களுடன் ராஜினாமா செய்த பாஜக எம்எல்ஏக்கள் பகவதி சாகர், வினய் ஷக்யா, முகேஷ் வர்மா, ரோஷன்லால் வர்மா ஆகியோரும் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர்.

பாஜகவில் இருந்து நேற்று விலகிய மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் விரைவில் சமாஜ்வாதி கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவால் உ.பி., பா.ஜ.,வுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

முன்னதாக தொழிலாளர் துறை அமைச்சராக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா ராஜினாமா நடவடிக்கையை துவக்கினார். பின்னர், திண்ட்வாரியில் இருந்து பிரிஜேஷ் குமார் பிரஜாபதி, பிதுனாவில் இருந்து ஷக்யா, ரோஷன் லால் வர்மா மற்றும் முகேஷ் வர்மா ஆகியோரும் ராஜினாமா செய்தனர்.

மேலும் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை முன்னாள் அமைச்சர் தாராசிங் சவுகானும் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததால், பா.ஜ. முகாம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது பின்னடைவின் தாக்கத்தை அதிகப்படுத்துகிறது. தலித் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பா.ஜ.க புறக்கணிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் ராஜினாமா நடவடிக்கை தொடர்ந்தது.

கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் பா.ஜ.க.வை விட்டுக்கொடுக்காத தலித் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வாக்குகளில் பெரும் சரிவை சந்திக்கும் என பாஜகவில் இருந்து விலகியவர்களில் பலர் தெரிவித்துள்ளனர். இது தொடரும் பட்சத்தில், பா.ஜ.க. வெற்றி பெறுவது கடினம் என கூறப்படுகிறது.

ஹாட் நியூஸ்:

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...