கணவர் திடீர் மரணம் – மனைவிக்கு தெரியாமல் ஒரே விமானத்தில் பயணித்த கணவரின் உடலும் மனைவியும்!

812

கண்ணூர் (17 மார்ச் 2020): ஓமனில் கணவர் திடீரென மரணம் அடைந்துவிட அங்கிருந்த மனைவிக்கு கணவர் இறந்ததை கூறாமல் ஒரே விமானத்தில் கணவரின் உடலையும் மனைவியையும் நண்பர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள புத்தியபுரத்தைச் சேர்ந்தவர் முகமது ஜாகீர் (30). இவர் 6 வருடங்களாக ஓமனில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு ஷிபானா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்குப் பின் ஷிபானாவை ஓமனுக்கே அழைத்துச் சென்றுள்ளார்.

இதற்கிடையே, ஜாகீர் நேற்று வீட்டின் அருகில் உள்ள மைதானத்தில் நண்பர்களுடன் கால்பந்து விளையாடச் சென்றிருக்கிறார். அங்கு அவர் அங்கேயே மயக்கம் அடைந்து உயிரிழந்துள்ளார்.

ஆனால் இந்த விவரத்தை ஷிபானாவிடமிருந்து அவரது நண்பர்கள் மறைத்துள்ளனர் . மூன்று மாத கர்ப்பிணியான ஷிபானாவிடம் “ஜாஹிருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், அவரை தற்போது சந்திக்க இயலாது என்று கூறி, ஜாகீர் இல்லாத நிலையில் இங்கு தனிமையில் இருக்க வேண்டாம்” என்று கூறி ஷிபானாவைக் கண்ணூருக்குத் திருப்பி அனுப்புவதற்குப் பேசியுள்ளனர். ஒரு வழியாக ஷிபானாவை சம்மதிக்க வைத்த நிலையில் ஷிபானாவுக்கு தெரியாமலேயே ஜாகீரின் உடலையும் அதே விமானத்தில் கேரளாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதைப் படிச்சீங்களா?:  பிரபல ஊடகவியலாளர் முஹம்மது ஜுபைர் கைது!

மேலும் ஷிபானாவுடன் ஊருக்கு வந்த சில நண்பர்கள் ஊருக்கு வரும்வரையில் அவருக்கு இந்த விஷயம் தெரியவிடாமல் பார்த்துக்கொண்டுள்ளனர். உறவினர்களும் இதை அவருக்குத் தெரிவிக்காமல் இருக்க நேற்று ஷிபானா சொந்த ஊர் திரும்பியுள்ளார். இதன் பின்னரே அவருக்குத் தகவல் சொல்லப்பட்டது என்று கூறப்படுகிறது. இவ்விவகாரம் கண்ணூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.