முழு ராணுவ மரியாதையுடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடல் தகனம் – VIDEO

Share this News:

புதுடெல்லி (10 டிச 2021): குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரது உடல்கள், 17 பீரங்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றபோது, முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவருடைய மனைவி, 12 ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

இதில், ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறந்தவர்களின் உடல்கள் நேற்று டெல்லி கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து இன்று டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உடல் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு, மத்திய அமைச்சர் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், மன்சுக் மாண்ட்வியா, ஸ்மிருதி இரானி, சர்பானந்தா சோனவல், ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், டில்லி கவர்னர் அனில் பைஜால், முதல்வர் கெஜ்ரிவால், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தமி, பா.ஜ.க. தலைவர் நட்டா, காங்கிரஸ் எம்.பி., ராகுல், அக்கட்சி மூத்த தலைவர் ஹரிஸ் சிங் ராவத், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, முன்னாள் அமைச்சர் அந்தோணி, பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனியன், இஸ்ரேல் தூதர் நயோர் கிலான், தி.மு.க., எம்.பி.,க்கள் ராசா, கனிமொழி, பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் மற்றும், ராணுவ தளபதி நரவானே, விமானப்படை தளபதி விஆர் சவுத்ரி, கடற்படை தளபதி ஹரிகுமார் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து, பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் இறுதி ஊர்வலம் துவங்கியது. இருவரது உடல்களும் காமராஜ் மார்க் வழியாக டில்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள பரார் சதுக்கத்தில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தர்கண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தமி, டில்லி முதல்வர் கெஜ்ரிவால், பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனியன், பிரிட்டன் தூதர் அலெக்ஸ் எல்லியஸ், பாதுகாப்பு படை அதிகாரிகள், இலங்கை தூதர் மிலிண்டா மொரகோடா, ராணுவம், விமானப்படை, கடற்படை தளபதிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து, அவரது உடலில் போர்த்தப்பட்ட தேசியக்கொடி மகள்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரே தகன மேடையில் வைக்கப்பட்ட, பிபின் ராவத் மற்றும் மதுலிகா ராவத்தின் உடலுக்கு மகள்கள், இணைந்து தங்களது குடும்ப வழக்கப்படி, இறுதிச்சடங்குகளை செய்தனர். இதனை தொடர்ந்து 17 பீரங்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பிபின் ராவத் மற்றும் மதுலிகாவின் உடலுக்கு மகள்கள் இருவரும் எரியூட்டினர்.


Share this News:

Leave a Reply