பிச்சை எடுத்தாவது ஆக்சிஜனை கொண்டு வாருங்கள் – மத்திய அரசு மீது நீதிமன்றம் பாய்ச்சல்!

460

புதுடெல்லி (22 ஏப் 2021): ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் பிச்சை எடுத்தாவது ஆக்சிஜனை கொண்டு வாருங்கள் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வட மாநிலங்களில் போதுமான ஆக்சிஜன் இல்லாததன் காரணமாக நோயாளிகள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் உயிரிழப்பும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் , டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று தங்களது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு செலுத்துவதற்கு போதிய ஆக்சிஜன் இல்லாத சூழல் இருப்பதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதால் தங்களுக்கான ஆக்சிஜனை உடனடியாக வழங்க அரசுக்கு உத்தரவிடுமாறும் மனுத் தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு தனது கண்டனங்களை தெரிவித்தது.

நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை செய்து தருவது என்பது அரசின் அடிப்படைக் கடமை. அதனை மத்திய அரசு சரிவர செய்ய வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்கு திருடுங்கள், பிச்சை எடுங்கள், கடன் வாங்குங்கள் அல்லது பணம் கொடுத்து எதையாவது செய்யுங்கள். ஆனால், ஆக்சிஜன் சப்ளையை செய்யுங்கள்” என மத்திய அரசை காட்டமாக டெல்லி ஐகோர்ட் கேட்டுக்கொண்டது.

இதைப் படிச்சீங்களா?:  தாயில்லா உலகை அவரால் தாங்கிக் கொள்ள முடியாது - சித்திக் காப்பன் மனைவி ரைஹானா உருக்கம்!

வழக்கின் விசாரணையை ஒருநாள் ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசின் வழக்கறிஞர் கேட்டபோது, இன்று இரவு ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கு நீங்கள் பொறுப்பு ஏற்பீர்களா எனக் கேள்வி எழுப்பியதோடு மட்டுமல்லாமல், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன்களை மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டியதுதானே என கேள்விகளை எழுப்பினர்.

தொழிற்சாலைகள் தயாரிக்கும் ஆக்சிஜன் அவர்களுக்கு ஆனது. அதுமட்டுமில்லாமல், பெட்ரோலியம் உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கான ஆக்சிஜன் தேவை என்பது கட்டுப்பாடில்லாமல் இருக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு மீண்டும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ‘மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் சூழலில் நீங்கள் தொழிற்சாலைகள் குறித்து கவலைப்படுகிறீர்கள், டெல்லியில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் இருக்கக்கூடிய சூழல் மிகவும் அபாயகரமானது. நாங்கள் வெறும் டெல்லியை குறித்து மட்டும் பேசவில்லை ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லாமல் பார்க்க வேண்டியது அரசின் பொறுப்பு. இதற்காக தொழிற்சாலைகளுக்கு செல்ல வேண்டிய ஆக்சிஜன்களை உடனடியாக மருத்துவ சேவைகளுக்கு திருப்பி விடுங்கள்” என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.