கர்நாடகாவை அடுத்து ஆந்திராவிலும் ஹிஜாப் தடை!

Share this News:

விஜயவாடா (17 பிப் 2022): விஜயவாடாவில் அமைந்துள்ள லயோலா கல்லூரியில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் வகுப்புகளுக்குள் நுழைய அனுமதி மறுக்கபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பு இதுபோன்ற பிரச்சினையை தாங்கள் எதிர்கொண்டதில்லை என்றும், தங்களது அடையாள அட்டைகளில் கூட புர்காவுடன் புகைப்படங்கள் இருப்பதாகவும் விஜயவாடா மாணவிகள் தெரிவித்தனர்.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண பெற்றோர்கள், சமூக பெரியவர்கள், கல்லூரி முதல்வர் மற்றும் காவல்துறையினரிடம் பேசி வருகின்றனர்.

சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தின் டாடியா மாவட்டத்தில் உள்ள அக்ரானி அரசு தன்னாட்சி முதுநிலைக் கல்லூரி மாணவர்கள் ‘மதம் சார்ந்த’ உடைகளை அணிவதைத் தவிர்க்குமாறு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணிந்திருந்த இரு மாணவிகளுக்கு எதிராக காவி சால்வை அணிந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோன்ற சம்பவம் புதுச்சேரியிலும் பதிவாகியுள்ளது, அரியாங்குப்பத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய சிறுமியை வகுப்புக்கு வரவிடாமல் தடுத்துள்ளனர்.

இதற்கிடையே புதன்கிழமை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஹிஜாப் மீதான தடையை எதிர்த்து மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரவிவர்ம குமார், முஸ்லிம் மாணவிகளுக்கு எதிரான பாகுபாடு முற்றிலும் மத அடிப்படையிலானது என்று வாதிட்டார்.

தலைப்பாகை அணிந்த சீக்கியர்களும், வளையல் அணிந்துள்ள இந்துப் பெண்களும், சிலுவை அணிந்திருக்கும் கிறிஸ்தவப் பெண்களும் கல்வி நிறுவனங்களில் அனுமதிக்கப்படும்போது ஹிஜாபிற்கு மட்டும் என் தடை விதிக்கப்படுகிறது? என்று குறிப்பிட்ட மூத்த வழக்கறிஞர், தடை செய்யப்பட்ட அரசு உத்தரவில் வேறு எந்த மதச் சின்னமும் குறிப்பிடப்படவில்லை என வாதிட்டார்.

ஹிஜாபிற்கான தடை, முஸ்லிம் மாணவிகளுக்கு எதிரான பாகுபாடு முற்றிலும் மதத்தை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் மேலும் வாதிட்டார்

இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ். தீட்சித் மற்றும் நீதிபதி காஜி ஜெய்புன்னேசா மொஹியுதீன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தது.


Share this News:

Leave a Reply