ஹிஜாப் அணிந்து தேர்வெழுத தடை – பள்ளியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட மாணவிகள்!

Share this News:

உடுப்பி (22 ஏப் 2022): கர்நாடகாவில் ஹிஜாப் தடை விவகாரம் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் உடுப்பி மாவட்டத்தி ஹிஜாப் அணிந்து 12 ஆம் வகுப்பு தேர்வெழுத சென்ற மாணவிகள் இருவர் தேர்வு எழுத அனுமதி மறுப்பட்டுள்ளனர். அனுமதி மறுக்கப்பட்ட இருவரும் ஹிஜாபுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் மனு அளித்தவர்கள் ஆவர்.

கர்நாடகா உடுப்பியில், இரண்டாம் பியூசி (12ஆம் வகுப்பு) தேர்வு எழுத வித்யோதயா பியூ கல்லூரி தேர்வு மையத்திற்கு வந்த அலியா அசாதி மற்றும் ரேஷ்மா ஆகியோர் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் மாணவிகள் ஹிஜாபை கழற்றி தேர்வுக்கு வருமாறு தேர்வு அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால் மாணவிகள் அதற்கு செவிசாய்க்க மறுத்துவிட்டனர்.

அவர்களுடன் தாசில்தார் அர்ச்சனா பட் நேரில் பேசி, தேர்வு அறைக்குள் நுழைவதற்கான நேரம் காலை 10.30 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், அலியா அசாதி மற்றும் ரேஷ்மா ஹிஜாப் அணிந்தபடி தேர்வு எழுத வலியுறுத்தினர்.

இதற்கு அதிகாரிகள் மறுத்ததால், மாணவர்கள் இருவரும் தேர்வு மையத்தில் இருந்து வெளியே வந்து ஆட்டோவில் ஏறி தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

முன்னதாக, ஹிஜாப் அணிந்து வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதி கோரி அவர்கள் தாக்கல் செய்த மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு பெஞ்ச் தள்ளுபடி செய்தது. ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் இன்றியமையாதது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது பெரும் சர்ச்சையானது.

இந்த உத்தரவையடுத்து, கர்நாடக அரசு வகுப்பறைகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்துள்ளதுடன், ஹிஜாப் அணிந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவித்துள்ளது.

மாநிலத்தில் ஏப்ரல் 22 முதல் மே 18 வரை நடைபெறும் இரண்டாம் பியூசி தேர்வுகளை 6.84 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply