ஹிஜாப் விவகாரம் – முஸ்லிம் மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு!

Share this News:

புதுடெல்லி (11 பிப் 2022): மத அடையாளங்களுடன் பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்கள் வர தடை வழங்கி கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர முஸ்லீம் பெண்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் முஸ்லீம் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இவ்விவகாரம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது குறித்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் வியாழனன்று, மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ். தீட்சித் மற்றும் நீதிபதி காஜி ஜெய்புன்னேசா மொகியுதீன் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இவ்வழக்கின் இறுதி உத்தரவு வரை மாணவர்களுக்கு எந்த மதச் சின்னங்களையும் அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டது.

விசாரணையின் போது, ​​ஒரு மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, 1983 கர்நாடக கல்விச் சட்டத்தின்படி, சீருடையில் விதிமுறைகளை உருவாக்க கர்நாடக அரசுக்கு உரிமை இல்லை என்று தெரிவித்தார். சீருடைக்கான விதிகளை கல்லூரி மேம்பாட்டுக் குழு (CDC) மற்றும் பள்ளி வளர்ச்சி மற்றும் மேலாண்மைக் குழு (SDMC) மூலம் உருவாக்க முடியும்.

பிரிவு 25 (1) இன் படி, ஹிஜாப் அணிவது மத உரிமை. சீக்கியர்கள் தலைப்பாகை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் என்றார்.

இந்நிலையில் இவ்வழக்கில் மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ஏற்கனவே இவ்வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து இவ்வழக்கு விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply