இந்தியாவில் கோவிட் மூன்றாவது அலை குறித்து இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை!

Share this News:

புதுடெல்லி (12 ஜூலை 2021); கோவிட் -19 நோய்த்தொற்றின் மூன்றாவது அலைக்கு வெகுஜனக் கூட்டங்கள் ‘சூப்பர் ஸ்ப்ரெடர்களாக’ மாற வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவிட்- நடைமுறையை குறைந்தபட்சம் இன்னும் மூன்று மாதங்களுக்கு கண்டிப்பாக அமல்படுத்துமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளை ஐ.எம்.ஏ வலியுறுத்தியுள்ளது. “சுற்றுலா , யாத்திரை பயணம், மத சடங்குகள் அனைத்தும் தேவையானதுதான் , ஆனால் அவற்றிற்கு இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும் ” என்று ஐ.எம்.ஏ தெரிவித்துள்ளது.

திங்களன்று இதுகுறித்து எழுதிய கடிதத்தில், கோவிட் -19 க்கு எதிரான பாதுகாப்பைக் குறைக்க வேண்டாம் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளை ஐ.எம்.ஏ வலியுறுத்தியுள்ளது.

கோவிட் தொற்றுநோயின் பேரழிவின் இரண்டாவது அலைகளிலிருந்து நாடு கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில் இந்த கடிதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. , எந்தவொரு தொற்றுநோய்களின் வரலாற்றிலும் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்றும் அந்த கடிதம் வலியுறுத்தியுள்ளது.

தடுப்பூசிகளை வழங்குவதன் மூலமும், கோவிடுக்கு எதிரான நடத்தைகளை கடைப்பிடிப்பதன் மூலமும் மூன்றாவது அலையின் தாக்கத்தை இந்தியா குறைக்க முடியும் என்று ஐ.எம்.ஏ தெரிவித்துள்ளது.

மேலும் “மூன்றாவது அலையைத் தவிர்க்க எல்லோரும் உழைக்க வேண்டிய இந்த முக்கியமான நேரத்தில், நாட்டின் பல பகுதிகளிலும் அரசாங்கமும் பொதுமக்களும் கோவிட நடைமுறைகளை பின்பற்றாமல் கூட்டங்களில் ஈடுபடுகிறார்கள். என்று ஐ.எம்.ஏ கவலை தெரிவித்துள்ளது.

இந்த கடிதத்தில் ஐ.எம்.ஏ தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால் மற்றும் பொதுச்செயலாளர் டாக்டர் ஜெயேஷ் லெலே ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.


Share this News:

Leave a Reply