பிரபல பின்னணி பாடகி கனிகா கபூருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – பீதியில் 96 எம்பிக்கள்

Share this News:

புதுடெல்லி (20 மார்ச் 2020): பிரபல இந்தி பின்னணி பாடகி கனிகா கபூருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதை அடுத்து இந்தி திரையுலகத்தினர் மட்டுமின்றி எம்.பிக்கள் எம்.எல்.ஏக்களும் பீதியடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில் பிரபல இந்தி பிண்ணனி பாடகி கனிகா கபூருக்கும் கொரோனா பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன் லண்டனில் இருந்து உ.பி. மாநிலம் லக்னோ வந்துள்ளார். கடந்த 4 நாட்களாக தனக்குக் காய்ச்சல் அறிகுறி இருந்ததாகவும் இதையடுத்து மருத்துவரை சந்தித்ததாகவும் அப்போது தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்ததாகவும் கனிகா தெரிவித்துள்ளார்.

லக்னோவில் கனிகா கபூர் கடந்த 14-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதில் உ.பி. மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் கலந்து கொண்டுள்ளார். மேலும் பல உ.பி. எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களும் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் தனக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்குமோ என்று பீதி ஏற்பட்டுள்ளதாக கூறி தன்னைத் தனிமைபடுத்திகொண்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டார். மேலும் கனிகா கபூரின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

கனிகா கபூரின் நிகழ்ச்சியில், ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. துஷ்யந்த் சிங் என்பவரும் கலந்து கொண்டதால் அவருக்கும் கொரோனா தொற்று இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த 18 ஆம் தேதி ராஷ்டிரபதி பவனில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் துஷ்யந்த் சிங் மற்றும் உ.பி., ராஜஸ்தான் எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் கலந்து கொண்டனர். இதில் ஜனாதிபதியும் அரசியல் பிரபலங்கள் பலரும் பங்கேற்றதால் அவர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. கொரோனா எதிரொலியாக ஜனாதிபதியின் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வி.ஐ.பி.க்கள் சந்திப்பும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply